திரைப்பாடல்களின் வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ்

கித்தியார் என்றால் ஆசிரியர் என்று நமக்குத் தெரியும். ஆனால், திரைப்பாடல்களின் வாத்தியாராகத் திகழ்ந்தவர் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ். தஞ்சை, மானம்பூச்சாவடியில் நாராயணசாமி-பாப்பு
திரைப்பாடல்களின் வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ்

கித்தியார் என்றால் ஆசிரியர் என்று நமக்குத் தெரியும். ஆனால், திரைப்பாடல்களின் வாத்தியாராகத் திகழ்ந்தவர் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ்.

தஞ்சை, மானம்பூச்சாவடியில் நாராயணசாமி-பாப்பு தம்பதிக்கு 1914-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பிறந்தார். அவ்வூரிலுள்ள புனித பீட்டர் பள்ளியில் படித்து, கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்று தஞ்சை கீழவாசல் பள்ளியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு நாடகத் துறையிலும் ஈடுபட்டதுதான் அவர் கலைத்துறையில் கால்கோளிட வாய்ப்பாக அமைந்தது. ஜெகந்நாத நாயுடுவின் "சுதர்சன கான சபா' நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். நாடகக் கதை வசனம் பாடல் எழுதுவோர் வாத்தியார் என்றழைக்கப்படுவது அந்நாளைய வழக்கம் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.

பிறகு, "ஜெயலட்சுமி கான சபா' என்று தானே ஒரு நாடகக் குழுவை ஏற்படுத்தி, மச்சரேகை, துருவன், கம்பர், விதியின் போக்கு, வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, பகடை பன்னிரண்டு ஆகிய நாடகங்களை ஊர்தோறும் முகாமிட்டு நடத்திவந்தார்.

ஜெயலட்சுமி கான சபா சேலத்தில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தபோது, அறிஞர் அண்ணாவின் நாடகக் குழுவினர் அங்கே இருந்து கொண்டு ஓர் இரவு, வேலைக்காரி போன்ற சமூக நாடகங்களை நடத்தி வந்தனர். அண்ணா, தன் நாடகம் முடிந்ததும் குழுவினருடன் ராமையாதாஸின் நாடகங்களைக் கண்டு ரசிப்பாராம்.

கவிஞர் ராமையாதாஸின் நாடக உரையாடலும், பாடல்களும் பிரபலமானதால், அவர் புகழ் திரைத்துறையில் பரவத்தொடங்கியது. அப்போது டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற படம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் பாடல்கள் எழுத ராமையாதாஸýக்கு வாய்ப்பு வந்தது.

""வச்சேன்னா வச்சது தான் புள்ளி'' என்ற அவரது முதல்பாடல் அந்நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்து திகம்பர சாமியார், சிங்காரி ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.

ராமையாதாஸின் மச்சரேகை நாடகம் 200 நாள்களைக் கடந்து நடந்து கொண்டிருந்ததைக் கண்ட நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் அதைத் திரைப்படமாக்க, ராமையாதாûஸ 1950-இல் சென்னைக்கு அழைத்தார். இவருடைய திறமையை அறிந்த நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம், "பாதாள பைரவி' படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதக் கேட்டுக்கொண்டது. 1951 முதல் 1960 வரை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதி மேலும் புகழ் பூத்தார்.

இதற்கிடையில், தமிழ்நாடக உலகின் தலைமை ஆசிரியர் எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளைத்தான் தன் குருவாக ஏற்று மகிழ்ந்தார். அது மட்டுமல்ல, அவரின் ஏகலைவன் என்றும் தன்னைக் கூறிக்கொண்டார். ராமையாதாஸýக்கு காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களோடு தொடர்பு உண்டு என்றாலும், அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதைதான் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி என்ற திரைப்படம். இப்படத்தில் ராமையாதாஸ் எழுதிய பாடல்களான, "சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு' என்ற பாடலும், "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா...' என்ற பாடலும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன.

தஞ்சை ராமையாதாஸின் பாட்டெழுதும் வேகத்தைக் கண்டு அதிசயித்த எம்.ஜி.ஆர். அவரை "எக்ஸ்பிரஸ் கவிஞர்' என்றே அழைத்து மகிழ்ந்தார். தமிழன்னைக்கு ஏதேனும் ஓர் உருப்படியான பணி செய்ய நினைத்த ராமையாதாஸ் "திருக்குறள் இசை அமுதம்' என்ற நூலை எழுதினார். 1962-இல் வந்த இந்த நூலுக்கு டாக்டர் மு.வ.வும் இசையரசு எம்.தண்டபாணி தேசிகரும் அணிந்துரை அளித்துள்ளனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

இவ்வாறு ஒட்டுறவோடு இருந்த ராமையாதாஸýக்கும் எம்.ஜி.ஆருக்கும் பின்நாளில், திரைப்படம் எடுத்தது தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவர் தொடக்க காலத்தில் ராமையாதாஸிடம் உதவியாளராக "நாட்டியதாரா' என்ற படத்துக்குப் பணிபுரிந்தார். வசனம் எப்படியிருந்தால் சிறப்பாக இருக்கும் என வழிகாட்டியவரும், ஜேசுதாஸ் என்ற அவர் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவரும் ராமையாதாஸ்தான்.

திரைப்படத் தயாரிப்புத் தொழில், அதில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கூறுகளுமே வணிக நோக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதே குறிக்கோள். அவற்றில் பாடலை மட்டும் எடுத்துக்கொண்டு இப்பாடலில் பொருளே இல்லை, இலக்கணம் இல்லை, பிறமொழிச் சொற்கள் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் விமர்சிப்பதில் பொருள் இல்லை. அவற்றில் இலக்கிய நயத்தை எதிர்பார்த்தல் சரியான அணுகுமுறை அல்ல. திரைப்பாடலின் உயிர்நாடி மெட்டுதான். இது அனைத்துப் பாடலாசிரியர்களுக்கும் தெரிந்த உண்மை. இதனால், அவர்களுக்கெல்லாம் இலக்கணத்தோடு பாடல் புனையத் தெரியாது என்று பொருளல்ல, அந்த இடத்துக்கு அவ்வாறு எழுதுவது பொருந்தாது - எடுபடாது என்பதேயாகும். அங்கெல்லாம் பணத்துக்குத்தான் முதலிடம்; இலக்கணத்துக்கும் விமர்சனத்துக்கும் வேலையில்லை.

தஞ்சை ராமையாதாûஸயும் விமர்சித்தனர். கடுமையாக விமர்சித்தவர் ஏ.எல்.நாராயணன். அவருக்கு மறுமொழி கீழ்கண்டவாறு கூறியுள்ளார் ராமையாதாஸ்.

""தம்பி! என்னை நல்லாதான் திட்டி எழுதியிருக்க, வெண்பா, கலிப்பா, எண் சீர் விருத்தம் அனைத்தும் எனக்கும் தெரியும். ஏத்தம் இறைக்கிறவன் ஐலேசா பாடாம, வண்டார் குழல் செண்டாட என்றா பாடுவான். நாலணா துட்டுக் கொடுத்துப் படம் பாக்கிறவனை சந்தோஷப்படுத்த வேண்டும். அதுக்குத்தான் எனக்குப் பணம் கொடுக்கிறார்கள். நான் வேண்டாம் என்றாலும் என்னை அந்த வலைக்குள் சிக்க வைக்கிறார்கள்'' என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.

83 படங்களில் சுமார் 532 பாடல்களை எழுதியதோடு, 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதிப் பணமும், புகழும் குவித்து, திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, 1950 முதல் 1963 வரை கொடிகட்டிப் பறந்தார்.ராமையாதாஸýக்கு இரண்டு மனைவியர். ஒருவர் தாயராம்மாள். இவருக்கு விஜயராணி என்ற மகள் இருக்கிறார். இன்னொருவர் ரங்கநாயகி. இவருக்கு த.ரா.ரவீந்திரன் என்ற மகன் இருக்கிறார்.

பாமரமக்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்கள் இயற்றியிருப்பதுதான் தஞ்சை ராமையாதாஸின் முத்திரை. அவர் இயற்றிய பாடல்களில் ""பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ'' என்ற பாடல்தான் அவருக்குப் பிடித்த பாடலாம்.

ராமையாதாஸ் நாடகத்துறையிலும் திரைத்துறையிலும் ஒரு சாதனையாளர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ராமையாதாஸ், 1965-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி காலமானார்.

தஞ்சை ராமையாதாஸின் கலைப்பணியைப் போற்றும் வகையில், 16.7.2010 அன்று கலைஞர் கருணாநிதி அவருடைய கலைப்படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ராமையாதாஸின் ஒரே வாரிசான ரவீந்திரன் அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால், கவிஞர் ராமையாதாஸ் பிறந்த இடமான தஞ்சையில், அவருக்கு மணிமண்டபமும் சிலையும் நிறுவி, கவிஞரின் பெயரில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com