தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!

"ஓவிய நூல்' என்ற சித்திரக் கலையை விளக்கும் நூல் பழங்காலத்தில் இருந்தது. "ஓவியச் செந்நூலுரை நூல் கிடக்கை' என்று மணிமேகலை கூறுகிறது. பெருங்கதை மற்றும் சீவகசிந்தாமணியில், அக்கால அரண்மனைகளில் அழகிய ஓவியங்
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!

"ஓவிய நூல்' என்ற சித்திரக் கலையை விளக்கும் நூல் பழங்காலத்தில் இருந்தது. "ஓவியச் செந்நூலுரை நூல் கிடக்கை' என்று மணிமேகலை கூறுகிறது. பெருங்கதை மற்றும் சீவகசிந்தாமணியில், அக்கால அரண்மனைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டதை அறியலாம். திருப்பரங்குன்றம் கோவில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் இருந்ததைப் பரிபாடல் கூறுகிறது.

நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.

இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.

தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.

திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.

கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.

சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.

குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.

சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.

வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.

பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.

"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.

சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.

யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில்

இருந்தது.

எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.

"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர். மேற்குறிப்பிட்டவற்றுக்கு ஆதாரமாகத் திகழ்வன "தமிழ்த் தாத்தா' டாக்டர் உ.வே.சாமிநாதையரின் நூல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com