கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்! 

"கல்விப் பெருவள்ளல்', "புதுக்கோட்டை அண்ணல்' என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், அய்யாக்கண்ணு - மாணிக்கத்தம்மாள் இணையருக்கு 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர்.
கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்! 

"கல்விப் பெருவள்ளல்', "புதுக்கோட்டை அண்ணல்' என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், அய்யாக்கண்ணு - மாணிக்கத்தம்மாள் இணையருக்கு 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர்.
 தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு "கல்வி வளர்ச்சிக் கழகம்' ஒன்றைத் தொடங்கினார். அண்ணலார் தம் ஆங்கிலப் படிப்பால் புதுக்கோட்டை தனியரசில் வனத்துறை அலுவலராகவும், கல்வித் துறை அலுவலராகவும், இறுதியில் கணக்குத் தணிக்கைப் பிரிவிலும் பணியாற்றி, 1948-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
 1953-ஆம் ஆண்டில் பேராசிரியர் சி. இலக்குவனார் புதுக்கோட்டைக்கு வந்தார். அந்தத் தமிழறிஞரை தக்க சமயத்தில் தாங்கிப் பிடித்துத் தளர்ச்சியின்றி உயர்த்திய பெருமை அண்ணலாரையே சாரும்.
 1954-ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் ஒன்றைத் தொடங்கினார். பேராசிரியர் சி. இலக்குவனார் வாரந்தோறும் இங்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தினார். ÷அண்ணலாரின் தொண்டு கல்விப் பணியாக மட்டுமின்றி, தமிழ்ப் பணியாகவும் தழைத்து வளர இலக்குவனாரின் வருகையே காரணமாயிற்று எனலாம். அண்ணலாரின் துணையால் இலக்குவனாரின் ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. திருக்குறள் கழகத்தில் திருக்குறள் வகுப்புகளோடு தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 223 கூட்டங்களை அண்ணலார் நடத்தியுள்ளார்.
 அக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞர் முடியரசனின் மனச்சோர்வை அகற்றி, மருத்துவப் பேரறிஞர் வி.கே. இராமச்சந்திரனார் மூலம் இதய நோயைஅகற்றி, தமிழகத்துக்கு ஒரு கவிஞரை மீட்டுத்தந்து தமிழின் இனிமையையும் காப்பாற்றிய பெருமை இவரையே சேரும்.
 வள்ளுவர் பதிப்பகத்தைத் தொடங்கி இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை, பழந்தமிழ், இலக்கியம் கூறும் தமிழர் ஆகிய நூல்களையும், க.த. திருநாவுக்கரசின் "சிந்துவெளி தரும் ஒளி' என்னும் நூலையும் வெளியிட்டார். அண்ணலாரின் "வாழ்வு நெறி' நூலும் "அண்ணல் சுப்பிரமணியனார் மணிமலர்' நூலும் இப்பதிப்பகத்திலேயே வெளியிடப்பட்டன.
 ஒரு நல்ல சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடையே தன்னல மிகுதிகூடாது என்றும், பிறரொடு கூடிவாழும் கூட்டுறவு மனப்பான்மையே வேண்டுமென்றும் அதற்குக் குழு மனப்பான்மையே வேண்டும் என்றும் சமூக அறிவியலார் கூறுவர். இத்தகைய அரிய பண்பாம் குழு மனப்பான்மை அண்ணலாரிடம் இயல்பாகவே இருந்தது. அவர் சாரணராகப் பயின்றதும் இளமை முதலே மாணவர்களைப் பழக்கி, நல்வழிப்படுத்த பாடுபட்டதும் இம் மனப்பான்மையை அவரிடம் வளர்த்தன.
 எங்கு சென்றாலும் சிலருடன் சேர்ந்தே காணப்படுவதும், உண்ணும்போதும், உலாவச் செல்லும்போதும், களித்திருக்கும்போதும், காட்சிகட்குச் செல்லும்போதும் தனித்துக் காணப்படாமல் நண்பர்களோடு அல்லது மாணவர்களோடு அவர் காணப்படுவது இதனை வலியுறுத்தும்.
 காலம் போற்றுதலில் அவர் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். வெளி ஆரவாரம் அவருக்குப் பிடிக்காது. எளிமை, நாணம், பழியஞ்சுதல், பொறுப்புணர்ச்சி, பிறரைப் போற்றுதல் என அவருடைய நற்பண்புகளைக் கூறிச் செல்வதைவிட, அண்ணலாரின் மாணவர்களைச் சுட்டிக்காட்டினாலே இப்பண்புகளின் அமைவும், அவற்றின் சிறப்பும் தெற்றெனப் புலனாகும். இக்கால இளைஞர்கள் போற்றுதலுக்கு மட்டுமல்ல, பின்பற்றுவதற்கும் உரியவை இப்பண்புகள்.
 ஞா. தேவநேய பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் முன்னிலையில் அண்ணலாருக்கு "அண்ணல்' பட்டம் வழங்கப்பட்டது. மதுரை திருவள்ளுவர் கழகம் இவருக்குத்
 "திருக்குறள் தொண்டர்' என்னும் பட்டத்தை வழங்கியது.
 1980-ஆம் ஆண்டில் குளித்தலை "தமிழ்க் காசு' விழாவில் இவருக்கு "சான்றாண்மை சால்புச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 1983-ஆம் ஆண்டில் திருச்சி புலவர் குழு இவருக்குத் "தமிழ்ச் சான்றோர்' பட்டத்தை வழங்கியது. 1984-ஆம் ஆண்டில் "புதுகை கம்பன் கழகம்' இவருக்குச் "சான்றோர் திலகம்' என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
 இத்தகைய அரிய பண்புகள் வாய்க்கப்பெற்ற கல்விப் பெருவள்ளலான சுப்பிரமணியனார் 11.5.1991-ஆம் ஆண்டு காலமானார். அவரை நினைவுகூர வேண்டிய நேரமிது.
 இவரிடம் அன்பு வைத்து மணி விழா நடத்திய குழுவினரால் இவருக்கு வழங்கப்பட்ட ரூ.5001 பெருமானமுள்ள பணமுடிப்பை மணிவிழா நிதிக்கே இவர் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 ÷
 - புலவர் தங்க. சங்கரபாண்டியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com