தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்

தக்காளியானது, மெக்ஸிகோ நாட்டின் பூர்வீக மக்களின் உணவு பயன்பாட்டிலிருந்தது. அங்கிருந்து ஸ்பானிஷ்காரர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவியது.
தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்

பெரம்பலூர்: தக்காளியானது, மெக்ஸிகோ நாட்டின் பூர்வீக மக்களின் உணவு பயன்பாட்டிலிருந்தது. அங்கிருந்து ஸ்பானிஷ்காரர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவியது. ஐரோப்பியர் மூலமாக இந்தியாவுக்கு கிடைத்ததாக வரலாறு. தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர் பிரதேசங்களில் சாகுபடி செய்வது கடினமாகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. சூரிய ஒளியைப் பொறுத்து பழங்களின் வண்ணம் மற்றும் தன்மைகள் மாறக்கூடும்.

தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய வேளாண் விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநர் இரா. வசந்தகுமார் கூறியது:

தக்காளிச் செடிகள் பொதுவாக 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரும். வலுவற்ற தண்டுகள் கொடியைப் போல வளருவதால், தாங்கிப் பிடிக்க பந்தல் போன்று குச்சிகளின் உதவி தேவைப்படும். காய்கள் அதிகம் பிடிக்கும்போது, அவற்றின் செடிகள் தரையில் படாமல் இருக்க உதவும்.

தக்காளி  பழவகை, எனினும் சமையல் காய்கறியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பழங்களில் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது தக்காளி. இது வழக்கமாக சாலட் அல்லது உணவுப் பொருளின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படுகிறது. 

2016-ஆம் ஆண்டில் உலக தக்காளி உற்பத்தியான 177 மில்லியன் டன்களில், சீனா 32 சதவீத உற்பத்தியுடன் முதல் இடத்தையும், ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாவது இடத்திலும், இந்தியா 18.4 சதவீத உற்பத்தியுடன் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்துள்ளது.

தக்காளி சாகுபடிக்கு ஏற்ற வெப்ப நிலை: விதை முளைத்தல் 16 - 29 டிகிரி செல்சியஸ், நாற்று வளர்ச்சி 21 - 24 டிகிரி செல்சியஸ், காய் உற்பத்தி 20 - 24 டிகிரி செல்சியஸ், சிகப்பு நிறம் அமைதல் 20 - 24 டிகிரி செல்சியஸ். 

சாகுபடிக்கேற்ற மண் தேவைகள்: வடிகால் வசதியுடன் கூடிய மணல் கலந்த பரப்பில் நன்றாக வளரக் கூடியது. ஆழ உழவு, வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், மண் காற்றோட்டமாக இருக்க உதவும். மண்ணின் காரத் தன்மை 6.0- 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும்.

விதைத் தேர்வு:

விதைகள் நன்கு பெருத்து, பழுத்த பழங்களில் இருந்து எடுக்கவேண்டும். பழங்களில் நோய்த் தொற்றுகள் இல்லாமல் இருப்பது அவசியம். முதல் அறுவடையில் கிடைக்கும் பழங்கள் விதைத் தேர்வுக்கு சிறந்தது. ஒரே மாதிரியான சீரான வளர்ச்சி பெற்ற விதைகளைப் பிரிக்க வேண்டும். தரமான விதைகளைத் தேர்வு செய்வது, தரமான உற்பத்திக்கு சாதகமாக அமையும்.
மேம்படுத்தப்பட்ட தக்காளி வகைகள்:  பி.கே.எம் 1, த.வே.ப.க கோ- 1, த.வே.ப.க கோ- 2 தக்காளி வீரிய ஒட்டு கோ- 3, கோ. டி.எச் 2.

விதைக்கும் காலம்:  ஜூன்- ஜூலை, நவம்பர்- டிசம்பர், பிப்ரவரி- மார்ச்.

நடும் பருவம்: அக்டோபர் - நவம்பர், பிப்ரவரி - மார்ச், மே - ஜூன்

விதை ரகங்கள்: ஏக்கருக்கு 125 கிராம், வீரிய கலப்பினங்கள் 40 கிராம். குழித்தட்டுகள் மூலமாக அமைத்தால் 6,000 முதல் 7,000  நாற்றுகள்  என்ற வீதத்தில்,  98 குழிகள் கொண்ட குழித்தட்டுகளை பயன்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி: அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1 மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 சதுர மீ., வரிசை இடைவெளியில் விதைக்க வேண்டும். பிறகு, மணல் கொண்டு மூடிவிட வேண்டும். திறம் பூஞ்சாணக்கொல்லி மற்றும் கவ்ச்சோ பூச்சி மருந்து கலந்து விதை நேர்த்தி செய்தால், முதல் 30 நாள்களுக்கு பூச்சி நோய்த் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். 

குழித்தட்டுகள் மூலமாக அமைத்தால், ஒரு ஏக்கருக்கு 30 முதல் 50 கிலோ நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவுடன் 20 கிலோ மண் புழு உரம் மற்றும் தலா அரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் 1 கிலோ வேம் கலந்து 30 -45 நாள்களுக்கு மூடாக்கு அமைத்து பயன்படுத்தினால் விதை முளைப்பு நன்றாக அமையும்.
உரமிடுதல்: நன்கு உழுத நிலத்தில் ஒரு டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பார் அமைத்து, அதன் ஒரு பக்கத்தில் நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். 25-இல் இருந்து 30 நாள் வயதுடைய நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு முதல் நாளும், நடவு செய்த 3-ஆவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும்.
இடைவெளி: கோ 1 - 60  45 செ.மீ, பி.கே.எம் 1 - 60  60 செ.மீ, வீரிய ஒட்டு- 150,  75, 60 செ.மீ (ஜோடி வரிசை) வாய்க்கால் 150 சென்டி மீட்டர் வரிசை 75 சென்டி மீட்டர் செடிக்கு செடி 60 செ.மீ.


நீர் நிர்வாகம்: நாற்று நட்ட 3-ஆவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத் தன்மையைப்  பொறுத்து வாரத்திற்கு அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ரகங்களுக்கு அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 40 கிலோ மணிச் சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். மேலுரமாக 30 கிலோ தழைச் சத்தை நட்ட 30-வது நாளில் இட்டு மண் அணைக்க வேண்டும். வீரிய ஒட்டுகளுக்கு அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்தும், 100 கிலோ மணிச் சத்தும், 40 கிலோ சாம்பல் சத்தும் இடவேண்டும். மேலுரமாக தழை, சாம்பல் இரண்டிலும் 40 கிலோ அளவை 30, 45, 60 நாள்களில் சமமாகப் பிரித்து இடவேண்டும். சொட்டுநீர் பாசனத்தில் ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை 80:100:100 கிலோ நீரில் கரையும் உரமாக இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை: சூடோமோனாஸ், ப்ளூரோசன்சஸ் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு பயன்படுத்துதல், ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோ மோனாஸ் இடுதல், பூச்சி, நோய் இல்லா விதை மற்றும் நாற்றுகள் தேர்வு செய்தல், வைரஸ் தாக்கப்பட்ட செடிகளை களைந்து அழித்தல். ஓரப் பயிராக சாமந்தி பூ வளர்த்தல். காய் புழுக்களுக்கு இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வைத்து கட்டுப்படுத்துதல். பேசில்லஸ் துறிஞ்சியென்சிஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து தெளித்து புழுக்களை கட்டுப்படுத்தலாம். டிரைசோ கிராமாசிலோனிஸ் ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு 20,000 முட்டைகளை இட்டு புழுக்களை கட்டுப்படுத்துதல். மஞ்சள் வண்ண ஓட்டுப்பொறி மற்றும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை சாறு கரைசல் 5 சதவீதம் கொண்டு பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வேர் முடிச்சு நூற்புழு: கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் எனும் அளவில் விதைக்கும்போது இடவேண்டும்.

நாற்று அழுகல்: விதைப்பிற்கு முன் விதைகளை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டி.விரிடி அல்லது திறம் 2 கிராம் கலந்து விதை நேர்த்திக்கு பின் நடவு மேற்கொள்ள வேண்டும்.

தக்காளி இலை சுருட்டு வைரஸ்: பயிர்களை அதிகம் தாக்கும் இந்நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகிறது. ஈக்களை கட்டுப்படுத்த அசிட்டாமிப்ரைட் மருந்தை ஒரு ஏக்கருக்கு 40 கிராம் இலை வழியாக தெளித்தல் வேண்டும். 10 நாள்களுக்கு பின் மறுபடியும் தெளித்து ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

இலைப் பேன்கள்: இது, தக்காளியில் புள்ளிவாடல் நோயைப் பரப்பும் காரணியாகச் செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை களைவதுடன், பேன்களைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 7 கிலோ ப்யூரடான் குருணையை இட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com