குழந்தைகள் முதல் வகுப்பில் சேர வயது வரம்பு நிர்ணயம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்

பெங்களூர், நவ. 22: முதல் வகுப்பில் சேர 5 வயது 10 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும் என்ற வரைமுறையை அமல்படுத்த துவக்கக் கல்வித்துறை தீர்மானித்துள்ளது.   துவக்கக் கல்விக்கு முன்பு கற்பிக்கப்படும் எல்.கே.ஜி.யி
Updated on
2 min read

பெங்களூர், நவ. 22: முதல் வகுப்பில் சேர 5 வயது 10 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும் என்ற வரைமுறையை அமல்படுத்த துவக்கக் கல்வித்துறை தீர்மானித்துள்ளது.

  துவக்கக் கல்விக்கு முன்பு கற்பிக்கப்படும் எல்.கே.ஜி.யில் (லோயர் கின்டர் கார்டன்) சேர குறைந்தபட்ட வயது 3 ஆண்டு 10 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்கேஜியில் சேர்க்கப்படும் குழந்தை யூ.கே.ஜி. (அப்பர் கின்டர் கார்டன்) முடித்து முதல் வகுப்புக்கு வரும்போது சரியாக 5 வயது 10 மாதங்கள் ஆகியிருக்கும். முதல் வகுப்பில் சேர இதுதான் தகுதியான வயது.

  ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இந்த விதிமுறையை கடைபிடிப்பது இல்லை. 3 வயது ஆனாலும் எல்கேஜியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் முதல் வகுப்புக்கு வரும்போது 5 வயது 10 மாதங்கள் ஆகியிருப்பது இல்லை. இதை கட்டாயமாக்க துவக்கக் கல்வித்துறை இப்போது முடிவு செய்துள்ளது. மாணவர்களின் தகுதியை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை துவக்கக் கல்வித்துறை எடுத்துள்ளது.

  இதுகுறித்து துவக்கக் கல்வித்துறை அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி நமது நிருபரிடம் கூறியதாவது:

  முதல்வகுப்பில் குழந்தைகள் சேர வயது 5 ஆண்டு 10 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது. 2010-2011 கல்வி ஆண்டு முதல் இது கட்டாயமாக அமல்படுத்தப்படும். எனவே 1-வது வகுப்பில் சேரும் குழந்தைகள் இந்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே பள்ளியில் அனுமதி அளிக்கப்படும்.

  இத்திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த தீர்மானிக்கும் முன் இதுகுறித்து கர்நாடக தொடக்கக் கல்வி தேர்வு வாரியத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அரசு பாடத்திட்டத்தை அமல்படுத்திவரும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 15 வயதுக்கு குறைவானவர்கள் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

  நவம்பர் 3-ம் தேதி இந்த சுற்றறிக்கை எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தற்போது பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர்களில் 17 ஆயிரம் பேர் 2010-ம் ஆண்டு ஜூன் மாத்துடன் 15 வயதை அடைந்திருக்க மாட்டார்கள். இவர்களது வயது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை குறைவாக இருக்கும். ஆனாலும் இவர்கள் சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ந்துவிட்டதால் 2010-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி இறுதித்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

  எனவே இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் எல்கேஜியில் சேர்க்கும்போதே குறிப்பிட்ட வயதை குழந்தைகள் அடைந்திருக்கிறார்களா என்று சரி பார்த்து அதன்பிறகே சேர்க்க வேண்டும்.

  அவ்வாறு சேர்க்காவிட்டால் அந்த குழந்தைகள் எஸ்எஸ்எல்சி வகுப்புக்கு வரும்போது இறுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். எனவே இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பள்ளிகளும் பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளை எல்கேஜியில் சேர்க்கும்போது 5 ஆண்டு 10 மாதங்கள் ஆகிவிட்டதா என்று சரி பார்த்து சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com