"காமராஜரின் கல்விப் பணியை மக்கள் மறக்க மாட்டார்கள்'

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் கல்விப் பணியை எப்போதும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்று, கர்நாடக இந்து நாடார் சங்கத் தலைவர் எஸ்.ராஜாமணி தெரிவித்தார்.
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் கல்விப் பணியை எப்போதும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்று, கர்நாடக இந்து நாடார் சங்கத் தலைவர் எஸ்.ராஜாமணி தெரிவித்தார்.

கர்நாடக மாநில இந்து நாடார் சங்கம் சார்பில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமராஜரின் 133-ஆவது பிறந்த நாள் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: இந்திய மற்றும் தமிழக அரசியலில் அழியாத தடங்களைப் பதித்துள்ள காமராஜர், தன்னலமறிய, நேர்மை தவறாத தலைவராக விளங்கியவர். பள்ளிகளை உருவாக்கி லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒளியை ஏற்றியவர்.

காமராஜரின் கல்விப் பணியை இந்திய மக்களால் என்றைக்கும் மறக்க முடியாது. இந்தியா முழுவதும் தற்போது செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர்.

ஒரு சிறை சாலையை மூடுவதற்கு நூறு பள்ளி சாலைகளைத் திறக்க வேண்டும் என்பதை உண்மையாக்கி காட்டியவர். ஏழை மக்களுக்கு இலவச கல்வி வழங்கியவர். வறுமையை ஒழிக்க கல்விதான் சிறந்த ஆயுதம் என்று உணர்ந்து செயல்படுத்திய படிக்காத மேதை காமராஜர்.

காமராஜரை போன்ற தலைவரையும் இனியும் இந்தியா பெறுவது கடினம். கடமைத் தவறாத, நேர்மை தவறாத, சுயநலமில்லாத, தன்னிகரில்லா தலைவராக விளங்கிய காமராஜரை இளைய சமுதாயத்திடம் அறிமுகம் செய்ய தவறக் கூடாது.

காமராஜரின் வாழ்க்கையை அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்தியமக்கள் அனைவரும் பின்பற்ற தவறக் கூடாது என்றார்.

விழாவில் சங்க பொதுச் செயலாளர் சுனைமுத்து, பொருளாளர் டி.ரெங்கநாதன், முன்னாள் தலைவர் டி.பால்சுந்தரம், ஆலோசகர் டாக்டர் டி.எஸ்.கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ரத்த தான முகாம், கல்யாணமாலை, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com