பாஜகவில் சேருவாரா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா?

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான பாஜகவில் சேருவாரா என்று அரசியல் அரங்கில் சூடான விவாதம் நடந்துவருகிறது.
பாஜகவில் சேருவாரா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா?
Updated on
2 min read

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான பாஜகவில் சேருவாரா என்று அரசியல் அரங்கில் சூடான விவாதம் நடந்துவருகிறது.
 கர்நாடகத்தின் 50 ஆண்டுகால அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக நிலைத்திருப்பவர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா (எஸ்.எம்.கிருஷ்ணா). பதற்றமில்லாத அணுகுமுறை, அசத்தலான ஆங்கில நடை, கோபம் தெறிக்காமல் எதிரிகளைத் தாக்கும் பாங்கு, அடக்கமான அரசியல் பாணி, அரசியல் நுணுக்கங்களை இயல்பாக வெளிப்படுத்துவது போன்ற சீரிய பல குணங்களால் அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த 46 ஆண்டு காலமாக கோலோச்சிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜன.29-ஆம் தேதி அறிவித்தார்.
 காங்கிரஸில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணாவின் முடிவு பலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும், வெகு விரைவில் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையவிருக்கிறார் என்று பாஜகவின் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா சனிக்கிழமை அறிவித்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. கர்நாடக சமூக, அரசியல் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு மவுசு கொஞ்சம் அதிகம்தான்.
 எடியூரப்பா கூற்றுப்படி, தனது கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக் கொண்ட பாஜகவில் எஸ்.எம்.கிருஷ்ணா ஐக்கியமாவாரா என்பதே கர்நாடக அரசியலில் சூடாக நடந்துவரும் விவாதமாகும்.
 கர்நாடக மாநிலத்தின் வளம் கொழிக்கும் மண்டியா மாவட்டத்தின் சோமனஹள்ளியில் பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா, மைசூரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்று, முதுநிலை பட்டப் படிப்பை அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மெத்தப் படித்தவர், வார்த்தைகளை அளந்து பேசி எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவர். வெளிநாட்டில் படித்திருந்தாலும், இவரது அரசியல் நாட்டம், 1962-இல் இவரை அரசியலுக்கு இழுத்து வந்தது.
 1962-இல் பிரஜா சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், தனது 84-ஆவது வயதிலும் அரசியல் கணக்குகளைப் போடுவதை நிறுத்தாமல் இருக்கிறார். மத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அன்றைய பிரதமர் நேரு பிரசாரம் செய்தபோதும், காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி கண்டார் எஸ்.எம்.கிருஷ்ணா. அன்றுமுதல், மக்களவை, மாநிலங்களவை, கர்நாடக சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினராக எஸ்.எம்.கிருஷ்ணா வலம் வரத் தொடங்கினார். 1968-இல் இருந்து பல முறை மக்களவை உறுப்பினராகவும், 1983-84 வரை இந்திரா காந்தி அமைச்சரவையில், 1984 முதல் 1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
 1996, 2006, 2008-ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இதனிடையே, 1972 முதல் 1977-ஆம் ஆண்டு வரை கர்நாடக அமைச்சராகவும், பின்னர், 1989 முதல் 1993-ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராகவும், 1993-1994 வரை துணை முதல்வராகவும், 1999-2004-ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராகவும், 2004-2008-ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிர ஆளுநராகவும், 2009-2012-ஆம் ஆண்டு வரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். 1962-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை எஸ்.எம்.கிருஷ்ணா பதவியில் இல்லாத நாள்கள் மிகமிக குறைவாகும்.
 எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் பதவியை அனுபவித்து வந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. 2014-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழந்த பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித பதவியும் இல்லாமல் இருக்கிறார். நீண்ட காலமாக அவர் பதவி இல்லாமல் இருந்தது இந்த காலக்கட்டத்தில்தான்.
 84 வயதில் 54 ஆண்டுகளாக ஏதாவது ஒரு பதவியை வகித்துவந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பதவியில் இல்லாமல் இருப்பது பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 3 ஆண்டுகால இடைவெளியை அவரது அரசியல் வாழ்க்கையில் வெற்றிடமாகக் கருதும் எஸ்.எம்.கிருஷ்ணா, தான் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி இல்லை என்றார்கள் என்று கூறிவிட்டுத்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். எப்படியாவது, ஏதாவதொரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பும் எஸ்.எம்.கிருஷ்ணாவை, அரசியல் ஒட்டுண்ணி என்றே காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர், பிரதமர் பதவிகளை தவிர, இதர உயர்ந்த பதவிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அனுபவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, மத்தியில் பலவீனமான நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியில் இனியும் நிலைத்திருப்பது பயனளிக்காது என்பதை உணர்ந்து அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
 இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மதசார்பின்மை, சோஷலிசம், ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை பேசிவந்த எஸ்.எம்.கிருஷ்ணா, இனி பாஜகவில் இணைந்து மதவாதம், இந்துத்துவா போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்வாரா? அப்படியே பாஜகவில் இணைந்தால் தேசிய மற்றும் மாநில அரசியலில் எதில் கவனம் செலுத்துவார். தேசிய அரசியலில் கவனம் செலுத்த விரும்பினால், மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை ஒதுக்கிவைத்திருக்கும் பாஜகவில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு எந்தப் பதவி வழங்கப்படும். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு குறிவைத்து காய் நகர்த்தினால், பாஜகவில் உழைத்தவருக்கு பதிலாக காங்கிரஸில் இருந்து வந்தவருக்கு அந்த வாய்ப்பை அக் கட்சி வழங்குமா?
 ஒருவேளை குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்கினால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகமுள்ள மாநிலங்களவையை எஸ்.எம்.கிருஷ்ணாவால் திறம்பட கையாள முடியுமா? அமைதியாக அவையை நடத்த காங்கிரஸýம் அனுமதிக்குமா?
 எளிதில் உணர்ச்சிவசப்படாத எஸ்.எம்.கிருஷ்ணா, தொட்டாசிணுங்கிகளான எடியூரப்பா, ஈஸ்வரப்பாவுடன் இணைந்து அரசியல் நடத்த இயலுமா? அரசியல் அரங்கில் நிழலாடும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் எஸ்.எம்.கிருஷ்ணாவே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறாராம். பிரதமர் மோடி அல்லது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இருவரில் ஒருவர் தன்னிடம் பேசுவதோடு, குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்க முன்வந்தால் மட்டுமே பாஜகவில் சேருவது என்ற முடிவில் உறுதியாக உள்ளாராம் எஸ்.எம்.கிருஷ்ணா.
 இதனிடையே, எஸ்.எம்.கிருஷ்ணாவை காங்கிரஸ் கட்சியில் தக்கவைக்க கடைசி கட்ட முயற்சிகள் நடந்துவருகின்றன. இதனிடையே, பாஜகவும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மனதைக் கரைக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் நிலைத்திருப்பாரா அல்லது பாஜகவில் ஐக்கியமாகி விடுவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com