கர்நாடகத்தின் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.
கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக, கர்நாடக மக்களின் பேராதரவைப் பெற்றவர் நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பார்வதம்மா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மே 14-ஆம் தேதி அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
புற்றுநோய் கிருமிகள் கல்லீரல் மற்றும் நுரையீரலில் பரவத் தொடங்கியதால் கடந்த ஒருவாரத்திற்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகக் கூறப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் அவரது ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் பார்வதம்மா உயிரிழந்தார்.
அப்போது, அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
குடும்பம்
மைசூரு மாவட்டம் சாலிகிராமா கிராமத்தில் அப்பாஜி கெளடா மற்றும் லட்சுமம்மா தம்பதிக்கு 1939, டிசம்பர் 6-ஆம் தேதி பிறந்தவர் பார்வதம்மா. தனது மாமன் மகனான நடிகர் ராஜ்குமாரை 1953, ஜூன் 25-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
நஞ்சன்கூடு நகரில் திருமணம் நடந்த போது பார்வதம்மாவுக்கு 14 வயது. ராஜ்குமார்-பார்வதம்மா தம்பதிக்கு சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மகன்கள், லட்சுமி, பூர்ணிமா மகள்கள் உள்ளனர்.
சென்னையில் வசித்து வந்த ராஜ்குமார் தம்பதி, 1972-இல் பெங்களூரில் குடியேறினர். நடிகர் ராஜ்குமார், 2006, ஏப்.12-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
திரை வாழ்க்கை
நடிகர் ராஜ்குமார், மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்த ஏராளமான கன்னட திரைப்படங்களை வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் மற்றும் பூர்ணிமா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பார்வதம்மா தயாரித்திருக்கிறார்.
ஒருசில படங்களின் விநியோகிப்பாளராகவும் திறம்பட பணியாற்றி வந்தார். தனது கணவரும், புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் நடித்த திரிமூர்த்திதான் பார்வத்தம்மா தயாரித்த முதல் படமாகும்.
இதைத் தொடர்ந்து தனது கணவர் ராஜ்குமாரை நடிகராகக் கொண்டு "ஹாலு ஜேனு' ,"கவிரத்ன காளிதாசா',"ஜீவன சைத்ரா' உள்ளிட்ட பல படங்களை பார்வதம்மா தயாரித்திருக்கிறார்.
தனது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரை திரைப்படங்களில் அறிமுகம் செய்து சாதனை படைத்தார். சிவராஜ்குமாரை வைத்து ஆனந்த்,ஓம்,ஜனுமதஜோடி, ராகவேந்திர ராஜ்குமாரை வைத்து சிரஞ்சீவி சுதாகர்,நஞ்சுண்டி கல்யாணா,ஸ்வஸ்திக்,டுவ்வி டுவ்வி, புனித்ராஜ் குமாரை வைத்து அப்பு,அபி,ஹுடுகரு,ராஜகுமாரா ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார்.
தனது திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகிற்கு மாலாஸ்ரீ, பிரேமா,ரக்ஷிதா, சுதாராணி, ரம்யா போன்ற நடிகைகளை அறிமுகம் செய்தவர். பார்வதம்மா ராஜ்குமாரின் திரைப்பட பங்களிப்பைப் பாராட்டி பெங்களுரு பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியது.
பார்வதம்மா தனது கணவர் ராஜ்குமாருடன் இணைந்து யோகா பயிற்சியிலும் ஈடுபட்டு வந்திருந்தார்.
விருதுகள்
80-க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களைத் தயாரித்த பார்வதம்மா ராஜ்குமார், பால்கே அகாதெமி விருது, கன்னட ராஜ்யோத்சவா விருது, கர்நாடக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
1982, 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் கர்நாடக அரசின் மாநில விருதுகளையும், 1986, 2010-ஆம் ஆண்டில் பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பொதுவாழ்வு
காவிரி நதிநீர்ப் போராட்டங்களில் கன்னட மக்களின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு கன்னட மக்களின் உரிமைகளுக்காக பேசியிருக்கிறார். தனது கணவர் ராஜ்குமாருடன் இணைந்து கன்னட திரையுலகை காக்கும் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் ராஜ்குமாரின் மறைவுக்கு பிறகு தனது கூட்டுக் குடும்பத்தை வழிநடத்திய பார்வதம்மா, ஏழை, எளிய மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு உதவிகளை செய்து வந்திருக்கிறார்.
கண்ணீர் அஞ்சலி
பார்வதம்மாவின் உடல், சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் எச்.அஞ்சநேயா, ஜி.பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மக்களவை காங்கிரஸ்குழு தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, மத்திய அமைச்சர் அனந்த்குமார், பேரவை துணைத் தலைவர் ஆர்.அசோக், மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி, நடிகர்கள் அம்பரீஷ், ரவிசந்திரன், துவாரகிஷ்,பிரேம், உபேந்திரா, நடிகைகள் சரோஜாதேவி, லீலாவதி, பாரதிவிஷ்ணுவர்தன், ஜெயந்தி, சுமலதா, ரக்ஷிதா, கன்னட திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் சா.ரா.கோவிந்து, திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வதம்மா உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதுதவிர, ராஜ்குமார் குடும்பத்துடன் நீண்டகாலமாக பழகி வந்த நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினர் சார்பாக சிவாஜி அறக்கட்டளைத் தலைவர் மா.நடராஜ், நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது சகோதரர் சத்தியநாராயணராவ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கர்நாடக மாநில அதிமுக (புரட்சித்தலைவி அம்மா அணி) சார்பில் பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.டி.குமார் உள்பட நூற்றுக்கணக்கான தமிழர்களும் பார்வதம்மாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
படப்பிடிப்பு ரத்து
பார்வதம்மாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னட திரைப்படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டன. மேலும், கர்நாடகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. திரையரங்குகள் முன்பு அவரது உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அப்படத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கண்கள் தானம்
நடிகர் ராஜ்குமாரின் வழியில் பார்வதம்மாவின் இரு கண்களும் தானம் செய்யப்பட்டன. நாராயண நேத்ராலயாவின் தலைமை மருத்துவர் புஜங்கஷெட்டி, குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு பார்வதம்மாவின் இரு கண்களையும் தானமாக எடுத்துக் கொண்டார்.
இந்த கண்கள் பார்வையிழந்த ஒருவருக்கு பொருத்தப்படும் என்று புஜங்கஷெட்டி தெரிவித்தார்.
உடல் அடக்கம்
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு குடும்ப வழக்கபடி பார்வதம்மாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார் பார்வதம்மாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.
அதன்பிறகு அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு, வெளிவட்டச் சாலையில் நந்தினிலேஅவுட்டில் உள்ள கண்டீருவா ஸ்டுடியோவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான திரையுலக நட்சத்திரங்கள், ராஜ்குமாரின் ரசிகர்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பார்வதம்மாவின் உடலை காண வழிநெடுக மக்கள் கண்ணீர் மல்க காத்திருந்தனர். கண்டீருவா ஸ்டுடியோவில் நடிகர் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அருகே பார்வதம்மாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் சித்தராமையாவின் உத்தரவுக்கு இணங்க பார்வதம்மாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். பார்வதம்மாவின் மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜ்குமாரின் ரசிகர்கள் உள்பட கர்நாடக மக்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
பார்வதம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமானோர் சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கண்டீருவா ஸ்டுடியோ செல்லும் வழியெங்கும் 4 துணை காவல் ஆணையர், 10 உதவி காவல் ஆணையர்கள், 20 காவல் ஆய்வாளர்கள் உள்பட பாதுகாப்புப் பணிகளுக்காக 3200 போலீஸார், மத்திய ஆயுதப்படையின் 2 அணியினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அரசியல் தலைவர்கள் இரங்கல்
பார்வதம்மா மறைவுக்கு முதல்வர் சித்தராமையா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரின் வெற்றியில் பார்வதம்மாவின் பங்களிப்பு முக்கியம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா: கன்னட திரையுலகின் புகழ் வாய்ந்த படத் தயாரிப்பாளரும், நடிகர் ராஜ்குமாரின் மனைவியுமான பார்வதம்மா ராஜ்குமார் மறைவு கர்நாடகத்திற்கு ஈடுசெய்ய முடியாத
பேரிழப்பாகும்.
பார்வதம்மாவின் பூர்வீகம் எனது சொந்த மாவட்டமான மைசூருதான். 80-க்கும் அதிகமான கன்னட திரைப்படங்களைத் தயாரித்து பணத்தையும், புகழையும் சம்பாதித்த தீரப் பெண்மணி. கன்னட திரைப்படத் துறைக்கு பல நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடிதந்தவர்.
கன்னட திரைப்படங்களின் மதிப்பை பலமடங்கு உயர்த்தி, அதன் சந்தை பரப்பையும் விரிவாக்கியவர். கன்னட திரையுலகம் கண்ட அதிசய நடிகர் ராஜ்குமாரின் வெற்றிக்கு பார்வதம்மாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒருபெண் இருப்பார் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பார்வதம்மா.
பார்வதம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார்: நடிகர் ராஜ்குமாரின் கலை,திறமைக்கு அடித்தளமாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்கியவர் பார்வதம்மா. அப்படிப்பட்ட பார்வத்தம்மா, கன்னட மக்களை விட்டு நிரந்தர ஓய்வுக்கு சென்றுவிட்டார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் மன தைரியத்தை வழங்க ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா: நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் ராஜ்குமாரின் மனைவியாக மரியாதையை சம்பாதித்து கொண்டவர். கன்னட கலையுலகினரால் அம்மா என்ற அன்பாக அழைக்கப்பட்டவர். கன்னட கலையுலகில் தனக்கென முத்திரையைப் பதித்தவர் பார்வதம்மா.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா: பார்வதம்மாவின் மறைவால் கன்னட திரையுலகின் சூரியஒளி மறைந்துள்ளது. ராஜ்குமாரின் வெற்றிக்கு பின்புலமாக விளங்கியவர். கன்னட திரையுலகிற்கு அபார பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகர் ராஜ்குமாரின் சமாதிக்கு அருகே பார்வதம்மாவின் உடலை அடக்கம் செய்யவுள்ளது அவர்களது திருமண வாழ்க்கைக்கு அளித்த கெளரவமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.