"தமிழ் சமூகத்தின் முற்போக்கு கருத்தியலுக்கு கோலார் தங்கவயலின் பங்களிப்பு அளப்பரியது'

தமிழ் சமூகத்தின் முற்போக்கு கருத்தியலுக்கு கோலார் தங்கவயலின் பங்களிப்பு அளப்பரியது என்று சமூகசெயற்பாட்டாளர் இரா.வினோத் தெரிவித்தார்.

தமிழ் சமூகத்தின் முற்போக்கு கருத்தியலுக்கு கோலார் தங்கவயலின் பங்களிப்பு அளப்பரியது என்று சமூகசெயற்பாட்டாளர் இரா.வினோத் தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் புதன்கிழமை நடந்த விழாவில் கோலார் தங்கவயல் தமிழர்களின் வாழ்வியல் குறித்து அம்பேத்கரிய செயற்பாட்டாளர் எம்.எஸ். ஞானானந்தம் எழுதிய 'நெஞ்சில் நின்ற நினைவுகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது.  இந் நூலை அம்பேத்கர் மக்கள் பேரவையின் தலைவர் ஜி.விஸ்வநாதம் வெளியிட,  பாவலர் மருது, உலக தமிழ் கழக தலைவர் கி.சி.தென்னவன்,  ஜேம்ஸ்பால், சாம்ராஜ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.  இடதுசாரி இயக்க தலைவர் இரா.அரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலாசிரியர் எம்.எஸ்.ஞானானந்தம் முன்னுரை ஆற்ற, சமூக செயற்பாட்டாளர் இரா.வினோத் சிறப்புரை ஆற்றினார். அப்போது 
இரா.வினோத் பேசியது:  புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தில் கோலார் தங்கவயல் மக்களின் வரலாறு, பண்பாடு குறித்த இந் நூல் வெளிவருவது சால பொருத்தமாக உள்ளது.  அம்பேத்கரிய செயற்பாட்டாளர் எம்.எஸ். ஞானானந்தம் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர்களின் வலி மிகுந்த வாழ்வையும், திரும்பவும் அசைப்போட வேண்டிய நினைவுகளையும் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார்.  தங்கவயலில் பிறந்தவர்களும், தங்கவயலின் வாழ்வை அறிய விரும்புபவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாகும் இது. 
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வடதமிழகத்தில் இருந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் காடு மேடாக கிடந்த இந்த ஊரை, இரவு பகலாக உழைத்து தங்கம் விளையும் வயலாக மாற்றினர்.  பூமிக்கு கீழே ஆயிரக்கணக்கான அடி கீழே சென்று தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டி எடுத்ததால் இந்நாட்டின் தலை நிமிர்ந்தது. சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், கர்நாடக மாநில மேம்பாட்டுக்கும், வடதமிழக கிராமங்கள் தன்னிறைவு அடைவதற்கும் தங்கவயல் தொழிலாளர்களே முக்கிய காரணம்.   
பொருளாதார ரீதியில் பெரும் பங்காற்றிய கோலார்தங்கவயல், நவீன இந்தியாவின் அரசியல், சமூக விடுதலை கருத்தியலுக்கும் மிகப்பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. குறிப்பாக கர்நாடகா, தமிழகம் ஆகியவற்றில் தோன்றிய தொடக்கக் கால முற்போக்கு இயக்கங்களுக்கு பொருளாதார அளவிலும், கொள்கை அளவிலும் கோலார்தங்கவயல் மக்கள் செய்த பங்களிப்பை அழிக்க முடியாது.
19-ஆம் நூற்றாண்டில் பண்டிதர் அயோத்திதாசர் சென்னையில் தோற்றுவித்த தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தை, முதலில் அங்கீகரித்தவர்கள் கோலார் தங்கவயல் மக்கள். அயோத்திதாசரின் வழியில் கோலார் தங்கவயலை சேர்ந்த எம்.ஒய்.முருகேசம், இ.நா.அய்யாக்கண்ணு புலவர், பண்டிதமணி அப்பாதுரையார் ஆகியோர் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இவர்களை பின்பற்றியே பெரியாரும் கோலார் தங்கவயலுக்கு வந்து, திராவிட இயக்கத்தை வலுப்படுத்தினார். 
அயோத்திதாசரின் பவுத்த சங்கத்தின் செயல்பாடுகளை பேராசிரியர் லட்சுமி நரசுவின் நூலின் மூலமாக புரட்சியாளர் அம்பேத்கர் அறிந்தார். இதனால் கோலார் தங்கவயலை தேடிவந்து பவுத்த சங்க செயற்பாடுகளை ஆய்வு செய்தார். இதனை தனது 'புத்தரும், அவரது தம்மமும்' நூலில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதாக அம்பேத்கர் அறிவித்த போது பவுத்தம் தழுவ வேண்டும் என கோலார்தங்கவயலை சேர்ந்த பண்டிதமணி அப்பாதுரையார் போன்றவர்கள் அவருக்கு தந்தி அனுப்பினர். அம்பேத்கரின் வாழ்வில் மிகப்பெரிய சம்பவமான பவுத்தம் தழுவலுக்கு கோலார்தங்கவயல் மக்கள் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கோலார் தங்கவயல் மக்கள் இந்தியாவில் பவுத்த மறுமலர்ச்சிக்கும், தாழ்த்தப்பட்டோர் அரசியலுக்கும், திராவிட சிந்தனைக்கும், தமிழ் சமூகத்தின் முற்போக்கு கருத்தியலுக்கும் உயிர்நாடியாக இருந்துள்ளனர். தமிழ் மொழியின் உரிமைக்காக போராடி உயிரையும் கொடுத்துள்ளனர். இந்த வரலாற்று உண்மையை மறைக்கும் போக்கு தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். கோலார்தங்கவயலின் தொன்மையான வரலாறையும், தொழிலாளர்களின் தீரா தியாகத்தையும் மறைக்க நினைப்பவர்களுக்கும், இன்றைய இளைய தலைமுறைக்கும் சொல்ல வேண்டியது நம்முடைய தலையாய கடமை ஆகும் என்றார்.
இந்நிகழ்வில் போதகர் கஜேந்திரன், சாம்ராஜ், பவுத்த சங்க செயற்பாட்டாளர் சந்திரன் உட்பட பலர் பங்கேற்ற இந்நிகழ்வில், இயேசு பாதம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com