தமிழர்களின் வாழ்த்து தட்டிகளை கிழித்த  கன்னட அமைப்பினர்

பெங்களூரில் தமிழில் எழுதப்பட்டிருந்த தட்டிகளை கன்னட அமைப்பினர் கிழித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் வாழ்த்து தட்டிகளை கிழித்த  கன்னட அமைப்பினர்

பெங்களூரில் தமிழில் எழுதப்பட்டிருந்த தட்டிகளை கன்னட அமைப்பினர் கிழித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் 40 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகளின் முன் தமிழில் எழுதப்பட்ட தட்டிகள் வைப்பதை ரசிகர்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.  இதேபோல, தமிழர் வாழும் பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்களாக உள்ள தமிழர்கள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்,  தேர்தலில் ஆதரவு திரட்டவும் அவ்வப்போது தமிழில் தட்டிகள் வைப்பது வாடிக்கை. 

அந்தவகையில், தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் சர்வக்ஞநகரில் உள்ள டேனரி சாலையில் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழில் எழுதப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 

பொங்கல் திருவிழாவுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இத் தட்டிகளை அகற்றுமாறு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.  இதனிடையே, பொங்கலுக்கு முன்னதாக டேனரி சாலைக்கு வந்த கர்நாடக ரக்ஷனவேதிகே (பிரவீண் ஷெட்டி அணி) அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தமிழில் வைக்கப்பட்டிருந்த தட்டிகளை கிழித்தெறிந்தனர்.  அப்போது, காவல் துறையினரின் தலையீட்டால் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில், டேனரி சாலைக்கு வியாழக்கிழமை வந்த கர்நாடக ரக்ஷனவேதிகே (பிரவீண் ஷெட்டி அணி)அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பெரியார் சதுக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த திமுக, அதிமுக, திராவிடர் கழகக் கொடிகளைக் கிழித்து, கொடிக் கம்பங்களைச் சேதப்படுத்தினர். 

இதைத் தொடர்ந்து,  டேனரி சாலையில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் தமிழ் தட்டிகளை ஆவேசத்துடன் கிழித்து துவம்சம் செய்தனர்.  பின்னர், டேனரி சாலையின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் தட்டிகளையும் அந்த அமைப்பினர் கிழித்து எறிந்து, கீழே சாய்த்தனர்.

மேலும், அங்கிருந்த வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் நடிகர்களின் புகைப்படங்களையும் அழித்தனர்.  மாமன்ற உறுப்பினர் ஏழுமலை, இப் பகுதியை தமிழ்நாடாக மாற்றி வருவதாக குற்றஞ்சாட்டினர்.  அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். தமிழ், தமிழர், தமிழ்நாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய கர்நாடக ரக்ஷனவேதிகே (பிரவீண் ஷெட்டி அணி) அமைப்பினர், இனிமேல் இப்பகுதியில் தமிழ் தட்டிகள்,சுவரொட்டிகள், பெயர்ப் பலகைகள் வைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர்.

இச் சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இச் சம்பவம் தமிழர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. தமிழில் எழுதப்பட்ட தட்டிகள் கிழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அப் பகுதி மக்கள், தேவர்ஜீவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

எம்.ஜி.ஆர் தட்டிகள் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜூ, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமாரிடம் புகார் அளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com