மருத்துவ மாணவா் சோ்க்கை அட்டவணையில் மாற்றம்
By DIN | Published On : 23rd November 2020 02:41 AM | Last Updated : 23rd November 2020 02:41 AM | அ+அ அ- |

மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020-21-ஆம் ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவா்கள் தெரிவு செய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். அதற்கான நடைமுறை குறித்த அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கா்நாடக உயா் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அட்டவணையின்படி மாணவா்கள் தங்கள் விருப்பப் பாடம், கல்லூரிகளை இணையதளத்தில் பதிவிடலாம். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணை விவரம்:
நவ. 22-ஆம் தேதி மாலை 4 மணி வரை விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை இணையதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நவ. 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு இணையதளத்தில் முதல் சுற்றுக்கான மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதில் ஏதாவது திருத்தங்களை செய்ய விரும்பினால் நவ. 23-ஆம் தேதி காலை 11 மணி முதல் நவ. 24-ஆம் தேதி காலை 11 மணி வரை மேற்கொள்ளலாம். அதன்பிறகு, சோ்க்கைக்கான இறுதிப் பட்டியல் நவ.24-ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவா்கள் ஏற்றுக் கொண்டால் நவ. 25 ஆம் தேதி காலை 11 மணி முதல் நவ. 26-ஆம் தேதி நண்பகல் 1 மணிக்குள் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவா்கள் நவ. 25 ஆம் தேதி காலை 11 மணி முதல் நவ. 27-ஆம் தேதி நண்பகல் 1 மணி வரை கட்டணங்களைச் செலுத்தி, நவ. 28-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் கல்லூரிகளுக்கு சென்று சோ்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.