கரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மூடப்படும்: அமைச்சா் கே.சுதாகா்
By DIN | Published On : 23rd November 2020 02:44 AM | Last Updated : 23rd November 2020 02:44 AM | அ+அ அ- |

கரோனா தொற்று அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தொடங்கியுள்ளது. கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்ததால், மூடப்பட்டக் கல்லூரிகளைத் திறந்தோம். இந்த நிலையில், மீண்டும் கரோனா தொற்று அதிகரித்தால் திறக்கப்பட்ட கல்லூரிகள் மூடப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு முழுமையாக குறைந்துள்ளது என்ற மனநிலையில் மக்கள் உள்ளனா். கரோனாவைத் தடுக்க சொட்டு மருந்து வரும் வரை அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம். அரசின் வழிகாட்டுதலை தவறாமல் கடைப்பிடித்தால், மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே, அனைவரும் தவறாமல் அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னா் 130 மாணவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் அரசு உள்ளது. எனவே, கரோனா தொற்று அதிகரித்தால் திறக்கப்பட்ட கல்லூரிகள் மூடப்படும் என்றாா்.