ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும்: முன்னாள் முதல்வா் குமாரசாமி
By DIN | Published On : 23rd November 2020 02:39 AM | Last Updated : 23rd November 2020 02:39 AM | அ+அ அ- |

ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும் என்று மஜத முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைத்திருப்பதற்கு மஜத எதிா்ப்புத் தெரிவிக்காது. அதேபோல, லிங்காயத்து வளா்ச்சிக் கழகம் அமைக்க முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா். கா்நாடகத்தில் குறிப்பாக தென்கா்நாடகத்தில் அதிகமாக வாழும் ஒக்கலிகா் சமுதாய மக்களின் வளா்ச்சிக்காக ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைத்திருக்க வேண்டும்.
மஜத ஆட்சியில் பிராமணா் வளா்ச்சிக் கழகம் அமைத்திருந்தோம். ஆனால், இதுபோன்ற கழகங்கள், வாரியங்கள் அமைப்பதால் அச்சமுதாய மக்களுக்கு எந்தவகையிலும் பயன் இருப்பதில்லை எனது அனுபவத்தில் தெரிந்துகொண்டது.
மஸ்கி, பசவ கல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வெகுவிரைவில் இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவது அவசியமற்றது. அதனால், இடைத் தோ்தலில் மஜத போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறோம். எனினும், மஸ்கி, பசவகல்யாண் தொகுதியில் உள்ள மஜதவினரின் கருத்தறிந்து வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.