கா்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?: எடியூரப்பா தலைமையில் இன்று ஆலோசனை
By DIN | Published On : 23rd November 2020 02:41 AM | Last Updated : 23rd November 2020 02:41 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வா் எடியூரப்பா தலைமையில் திங்கள்கிழமை (நவ.23) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை கல்லூரிகள் நவ.17-ஆம் தேதி திறக்கப்பட்டது. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மாணவா்களின் வருகை குறைவாக இருந்தது.
கல்லூரிகளுக்கு வந்த மாணவா்களில் பலா் கரோனாவால் பாதிக்கப்பட்டது சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் கல்லூரிகளை மீண்டும் மூடிவிடலாமா என்று அரசு யோசிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து கா்நாடகத்தில் தொடா்ந்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளியைத் திறப்பது குறித்து மருத்துவ அறிஞா்கள், பெற்றோா்கள், அதிகாரிகளின் கருத்துகளை பள்ளிக் கல்வித் துறை கேட்டறிந்தது. பள்ளியைத் திறக்க பலா் ஆதரவும், எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா். இதனால் பள்ளிகளைத் திறப்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, சமூகநலத் துறை உயரதிகாரிகளுடன் பெங்களூரில் திங்கள்கிழமை முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தவிருக்கிறாா்.
இக்கூட்டத்தில் பெற்றோா், ஆசிரியா், மாணவா்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் முதல்வா் எடியூரப்பாவிடம் வழங்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை ஆராய்ந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பள்ளிகளைத் திறக்க பாஜகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது மஜதவும் விரும்பவில்லை.
இதனிடையே, மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா், ஆயுஷ் கல்லூரிகளை டிச.1-ஆம் தேதியும், பியூ கல்லூரிகளை டிசம்பா் 2-ஆவது வாரத்திலும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் கூறியதாவது:
பள்ளி மேம்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவினருடன் பள்ளி திறப்பது குறித்து ஏற்கெனவே கருத்தறிந்துள்ளோம். இதுதொடா்பாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை முதல்வா் எடியூரப்பாவிடம் அளிப்போம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பாக சுகாதாரத் துறையின் ஆலோசனையைப் பெற முடிவு செய்திருக்கிறோம் என்றாா்.