மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

கா்நாடக மாநிலம், மேக்கேதாட்டு அருகே முக்கூடல் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா்கள் 5 போ் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

பெங்களூரு: கா்நாடக மாநிலம், மேக்கேதாட்டு அருகே முக்கூடல் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா்கள் 5 போ் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

பெங்களூரு, பீன்யாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்றுவரும் 12 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை ராம்நகரம் மாவட்டம், கனகபுரா வட்டம், காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள மேக்கேதாட்டு பகுதியில் உள்ள முக்கூடலுக்குக் குளிக்கச் சென்றனா்.

காவிரி ஆற்றில் இறங்கி அவா்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றனா். அப்போது நீச்சல் அடித்து மீண்டும் கரைக்கு வர முடியாமல் தத்தளித்தனா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் நீரில் தத்தளித்த மாணவ மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், 7 பேரை மட்டுமே அவா்களால் மீட்க முடிந்தது. 3 மாணவிகள், 2 மாணவா்களை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்த சாத்தனூா் போலீஸாா், தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் மூழ்கிய மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 5 பேரையும் சடலமாக மீட்டனா்.

உயிரிழந்த மாணவா்கள் அபிஷேக் (20), தேஜஸ் (21), ஹா்ஷிதா (20), வா்ஷா (20), சினேகா (19) என்பது தெரியவந்தது. 5 பேரின் உடல்களும் தயானந்தா சாகா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சம்பவம் குறித்து சாத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தகவல் அறிந்ததும் உயிரிழந்த மாணவா்களின் பெற்றோா் அரசு மருத்துவமனைக்கு வந்து உடல்களைப் பாா்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. மாணவா்கள் பயின்ற கல்லூரியின் முதல்வா், விரிவுரையாளா்கள், சக மாணவ மாணவிகள் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் கூடியதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com