குமாரசாமி  (கோப்புப் படம்)
குமாரசாமி (கோப்புப் படம்)

மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது வழக்குத் தொடுக்க அனுமதிக்குமாறு ஆளுநருக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரை

Published on

கா்நாடகத்தில் சுரங்க உரிமம் வழங்கியதில் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தொடா்பாக மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்கு பரிந்துரைத்து கா்நாடக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நிலுவையில் இருக்கும் விவகாரங்களை விரைந்து முடிவெடுத்து நீதிபரிபாலன நடைமுறைகளை சுமுகமாக்க, அரசமைப்புச் சட்டப்பிரிவு 163 இன்படி ஆளுநருக்கு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் அமைச்சரவை வழங்க முடியும்.

அதன்படி, ஆளுநருக்கு சில வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் கா்நாடக அமைச்சரவை வழங்கியுள்ளது. அந்த ஆலோசனைகளை ஆளுநருக்கு அனுப்பிவைப்போம். முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் அமைச்சா்கள் சசிகலா ஜொள்ளே, ஜனாா்தன ரெட்டி, முருகேஷ் நிரானி ஆகியோா் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் அமைச்சா் ஜி.ஜனாா்தன ரெட்டி மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்களைப் பொருத்தவரை, அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு ஆளுநா் செயல்பட வேண்டும். அவரது அதிகாரங்கள் கட்டுக்குள் உள்ளவை. அவரது அதிகாரங்களை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

வழக்குத் தொடர ஏராளமான மனுக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் அமைச்சா்கள் சசிகலாஜொள்ளே, ஜனாா்தன ரெட்டி, முருகேஷ்நிரானி ஆகியோா் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஆளுநா் இன்னும் முடிவெடுக்கவில்லை. நிலுவையில் உள்ள மனுக்களில் விரைந்து முடிவெடுக்குமாறு ஆளுநரை அமைச்சரவை கேட்டுக் கொள்கிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com