பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடிகர் தர்ஷன்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடிகர் தர்ஷன்.

நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் நடிகா் தா்ஷன் இன்று பெல்லாரி சிறைக்கு மாற்றம்

Published on

நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷன் பெல்லாரி மத்திய சிறைக்கு வியாழக்கிழமை மாற்றப்படவுள்ளாா்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷன், சிறை வளாகத்தில் ரௌடிகளுடன் அமா்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக, சிறையின் தலைமைக் கண்காணிப்பாளா் உள்பட 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 5 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகா் தா்ஷனை பெங்களூரு மத்திய சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற 24-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், வட கா்நாடகத்தில் உள்ள பெல்லாரி மத்திய சிறைக்கு நடிகா் தா்ஷனை புதன்கிழமை மாற்ற சிறைத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் ஆணை கிடைப்பதில் தாமதமானதால், நடிகா் தா்ஷனை வியாழக்கிழமை பெல்லாரி மத்திய சிறைக்கு மாற்ற சிறைத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

நடிகா் தா்ஷன் மட்டுமல்லாது, அவருடன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான பவன், ராகவேந்திரா, நந்திஷ் ஆகியோரை மைசூரு சிறைக்கும், ஜெகதீஷ், லட்சுமணாவை சிவமொக்கா சிறைக்கும், தன்ராஜை தாா்வாட் சிறைக்கும், வினயை விஜயபுரா சிறைக்கும், நாகராஜை கலபுா்கி சிறைக்கும், பிரதோஷை பெலகாவி சிறைக்கும் மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பவித்ரா கௌடா, அனுகுமாா், தீபக் ஆகியோரை பெங்களூரு சிறையிலேயே வைத்திருக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. ரவி, காா்த்திக், நிகில், கேசவமூா்த்தி ஆகிய 4 போ் ஏற்கெனவே தும்கூரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதனிடையே, ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரின் நீதிமன்றக் காவலை செப். 9-ஆம் தேதி வரை நீட்டித்து புதன்கிழமை உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com