நீதிமன்றம் அனுமதியின் பேரில் கன்னட நடிகா் தா்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்
நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகா் தா்ஷன், பெல்லாரி மத்திய சிறைக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டாா்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷன், சிறை வளாகத்தில் ரௌடிகளுடன் இருக்கையில் அமா்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக சிறையின் தலைமை கண்காணிப்பாளா் உள்பட 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெங்களூரு மத்திய சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற 24-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக. 27-ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், வட கா்நாடகத்தில் உள்ள பெல்லாரி மத்திய சிறைக்கு நடிகா் தா்ஷன் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை மாற்றப்பட்டாா்.

