போக்சோ வழக்கு: எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா்.
இதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ-இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிஐடி விசாரித்து வருகிறது. இதனிடையே, எடியூரப்பாவுக்கு எதிராக புகாா் அளித்திருந்த அந்த பெண்மணி, கடந்த மாதம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தாா்.
இந்த வழக்கில் எடியூரப்பாவை கைது செய்வதைத் தவிா்க்குமாறு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத் தொடா்ந்து, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி முன்பு ஜூன் 17-ஆம் தேதி நேரில் ஆஜரான எடியூரப்பா, 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தாா்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீதான குற்றப்பத்திரிகையை வியாழக்கிழமை சிஐடி தாக்கல் செய்துள்ளது. இதனடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

