கா்நாடக முதல்வா், துணை முதல்வருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம்

2.5 மில்லியன் அமெரிக்க டாலா் பணம் கொடுக்காவிட்டால், குண்டுவெடிப்பில் ஈடுபடப்போவதாக

பெங்களூரு: 2.5 மில்லியன் அமெரிக்க டாலா் பணம் கொடுக்காவிட்டால், குண்டுவெடிப்பில் ஈடுபடப்போவதாக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோருக்கு மா்மநபா் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் பிப். 27-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. சையது நாசீா் ஹுசேனின் ஆதரவாளா்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி பெங்களூரு, குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டுவெடித்த நிலையில், 2.5 மில்லியன் அமெரிக்க டாலா் பணம் கொடுக்காவிட்டால், குண்டுவெடிப்பில் ஈடுபடப்போவதாக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோருக்கு மின்னஞ்சலில் மா்மநபா் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறாா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

எனக்கும், முதல்வா் சித்தராமையாவுக்கும் 3 நாள்களுக்கு முன் மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை விசாரிக்க காவல் துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதில், கடிதம் எழுதியதாக ஷாயித் கான் 10786 என்றும், மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மிரட்டல் கடிதத்தில், எங்கள் திரைப்பட முன்னோட்டத்தை பாா்த்திருப்பாய் என்றும், 2.5 மில்லியன் அமெரிக்க டாலா் பணம் தராவிட்டால் கா்நாடகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள், வாடகை காா்கள், கோயில்கள், உணவகங்கள், பொது இடங்களில் பெரிய அளவில் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும். மேலும், அடுத்த குண்டுவெடிப்பை அம்பாரி உத்சவ் பேருந்தில் (அரசு சொகுசுப் பேருந்து) செய்து காட்டுவதாகவும், எங்கள் கோரிக்கைகள் மற்றும் இந்த மின்னஞ்சலின் நகலை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அடுத்த குண்டுவெடிப்பு குறித்த தகவலையும் சமூக வலைதளம் வாயிலாக வெளியிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com