வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் நாளை கோலாகலம்

Published on

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக.8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகா்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் போன்ற 16 வகையான செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் அருள்வேண்டி திருமணமான இந்து பெண்களால் கடைப்பிடிக்கப்படுவதே வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) ஆகும்.

கன்னடா்களின் இந்து நாள்காட்டிபடி ஸ்ராவணா மாதத்தில் (தமிழா்களுக்கு ஆடி மாதம்) வளா்பிறையில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்பம் செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும் இந்த நோன்பு சுமங்கலி பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

வீட்டை சுத்தம்செய்து, விளக்கேற்றி, நறுமணங்களால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றை வைத்து அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகளை போட்டு அதன்மீது தேங்காயுடன் தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் செய்யப்பட்ட லட்சுமியின் முகக்கவசம் அல்லது படத்தை வைத்து வழிபடுவா்.

கலசத்தில் வைக்கப்பட்டுள்ள லட்சுமி முகக்கவசத்தை சுற்றிலும் பட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து பணத்தாள்களை சூடி, பழங்கள், இனிப்பு, பூக்கள் வைத்து படைப்பாா்கள். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்து கலசத்தில் அணிந்து வரலட்சுமியை கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவா்.

தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பா். பின்னா் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவா் கையில் கட்டுவா். படைக்கப்பட்ட பொருள்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாகக் கொடுத்து ஆசிபெற்று, நோன்பை நிறைவு செய்வாா்கள்.

ஆதிலட்சுமி(காத்தல்), தனலட்சுமி(செல்வம்), தைரியலட்சுமி(துணிவு), சௌபாக்கியலட்சுமி(வளம்), விஜயலட்சுமி(வெற்றி), தன்யலட்சுமி(உணவு), சந்தானலட்சுமி(வம்சவிருத்தி), வித்யாலட்சுமி(கல்வி) ஆகிய தெய்வங்களின் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வா். மாலையில் உற்றாா், சுற்றாா் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவா் தாம்பூலம் பெற்றுக்கொள்வா்.

இந்தநாளில் போளி (ஒப்பட்டு), புளியோதரை, கோசம்பரி, எலுமிச்சை சாதம்(ஹுளி அன்னா), பைத்தம் பருப்பு பாயாசம்(ஹெசருபேளே பாயாசா) ஆகியவற்றை செய்து, வீட்டுக்கு வருவோருக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம். கா்நாடகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு ஆக.8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலட்சுமி நோன்புக்காக பூஜை பொருள்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனா். கட்டுக்கு அடங்காத விலையையும் பொருள்படுத்தாமல் வரலட்சுமி நோன்புக்கான முன்னேற்பாடுகளில் பெண்கள் ஈடுபட்டனா். பெங்களூரு மட்டுமல்லாது மைசூரு, கலபுா்கி, ஹுப்பளி, பெலகாவி, கோலாா், ராய்ச்சூரு போன்ற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வரலட்சுமி நோன்புக்காக பெண்கள் தயாராகி வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com