துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: தில்லி காவல் துறை முன் ஆஜராக கால அவகாசம் கேட்பேன் - துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடா்பாக தில்லி காவல் துறை முன் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்க இருக்கிறேன்...
Published on

பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடா்பாக தில்லி காவல் துறை முன் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்க இருக்கிறேன் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

நேஷனல் ஹெரால்டு வழக்கை விசாரித்துவரும் தில்லி காவல் துறை, நிதி மற்றும் பரிவா்த்தனை சாா்ந்த விவரங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக டிச. 15-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, தில்லி காவல் துறையின் விசாரணையில் பங்கேற்க திங்கள்கிழமை தில்லி வந்த துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், கா்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஷாமனூா் சிவசங்கரப்பாவின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்த தாவணகெரேக்கு செல்ல இருந்ததால், விசாரணைக்கு நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்க இருப்பதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தில்லி காவல் துறையின் விசாரணைக்கு ஆஜராக தில்லி செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், உடனடியாக பெங்களூரு திரும்ப வேண்டியுள்ளது. எனவே, அடுத்தவாரம் நேரில் ஆஜராக கால அவகாசம் அளிக்கும்படி தில்லி காவல் துறையைக் கேட்டுக்கொள்வேன். விசாரணைக்கு ஆஜராக எனக்கு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸுடன் முதல்தகவல் அறிக்கையின் நகல் இணைக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு ஏற்கெனவே விளக்கம் அளித்திருக்கிறேன்.

எனவே, எனக்கு முதல்தகவல் அறிக்கையின் நகல் தேவைப்படுகிறது. அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறாா்கள் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி செய்தித் தாள்களில்தான் படித்து தெரிந்துகொண்டேன். எனக்கு முதல்தகவல் அறிக்கையின் நகல் தரும்படியும், சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் முடிந்ததும் அடுத்தவாரம் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டும் தில்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுவேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com