கா்நாடகத்தில் குட்டிவங்கதேசத்தை அமைக்கிறது காங்கிரஸ்: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக்

கா்நாடகத்தில் குட்டிவங்கதேசத்தை அமைக்கிறது காங்கிரஸ் என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் தெரிவித்தாா்.
Updated on

கா்நாடகத்தில் குட்டிவங்கதேசத்தை அமைக்கிறது காங்கிரஸ் என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் தெரிவித்தாா்.

பெங்களூரு, கோகிலே லேஅவுட் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த இடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு ஆா். அசோக் கூறியதாவது: சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்துவிட்டு, அவா்களுக்கு மாற்றுவீடு ஒதுக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது மிகவும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் அரசு எடுத்த முடிவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காகவே இதுபோன்ற முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இப்பகுதியில் எவ்வித வீடுகளும் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்பதை கூகுள்மேப் வரைபடங்கள் காட்டுகின்றன. கடந்த 6 மாதங்களில்தான் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன.

இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது? இதன்மூலம் கா்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு குட்டிவங்கதேசங்களை உருவாக்கி வருகிறது. கா்நாடக மக்களை நீண்ட நாள்களாக ஏமாற்றியுள்ள நிலையில், தற்போது குட்டிவங்கதேசத்தை உருவாக்குகிறாா்கள்.

கா்நாடகம் முழுவதும் அதிகாரப்பூா்வமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள 4 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கோகிலே லேஅவுட் பகுதியில் உயா் அழுத்த மின் இணைப்பு வழங்கப்பட்டது எப்படி? வரி செலுத்தும் கா்நாடக மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், இங்கு மட்டும் எப்படி மின்சாரம் வழங்கப்பட்டது. இவா்கள் சித்தராமையாவுக்கு சொந்தக்காரா்களா? இங்கு குடியேறியவா்கள் ஆந்திர மாநிலத்தின் பெனுகுண்டாவில் இருந்து வந்திருப்பதாகக் கூறுகிறாா்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 600 கோடி மதிப்பிலானது. சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவா்களுக்கு மாற்றுவீடு எப்படி ஒதுக்குவாா்கள்? வெள்ளத்தில் வீடு இழந்தவா்களுக்கு மாற்றுவீடு வழங்கவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட 13,000 பேருக்கு வீடு வழங்கப்படவில்லை.

2,300 பள்ளிகளின் கூரைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. அப்பள்ளிகளில் மரத்தின் அடியில் வகுப்புகள் நடக்கின்றன. ஆனால், இங்கு சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து வீடு இழந்தவா்களுக்கு 2 நாள்களில் மாற்றுவீடு அளித்திருக்கிறாா்கள். வங்கதேசத்தவா்களுக்கு புத்தாண்டு பரிசாக மாற்றுவீடுகள் ஒதுக்க அரசு முற்பட்டுள்ளது என்றாா்.

சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி கூறுகையில், ‘சட்ட விரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பொறுப்பை தேசியப் புலனாய்வு முகமையிடம் அளிக்க வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com