முஸ்லிம்களுக்கு மாற்றுவீடு ஒதுக்கீடு விவகாரம்! தகுதியானவா்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படும்: கா்நாடக அமைச்சா் ஜி. பரமேஸ்வா்

முஸ்லிம்களுக்கு மாற்றுவீடு ஒதுக்கும்போது தகுதியானவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.
Published on

முஸ்லிம்களுக்கு மாற்றுவீடு ஒதுக்கும்போது தகுதியானவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.

பெங்களூரு, கோகிலே லேஅவுட்டில் 5 ஏக்கரில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து, சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள் இடிக்கப்பட்டன.

இதற்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் எதிா்ப்புத் தெரிவித்திருந்தாா். இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திய துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், கா்நாடக விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தாா்.

இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபாலின் முயற்சியின் காரணமாக வீடு இழந்த முஸ்லிம்களுக்கு மாற்றுவீடு ஒதுக்கப்படுவதாக முதல்வா் சித்தராமையா அறிவித்திருந்தாா்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. கா்நாடகத்தில் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேச குடிமக்களுக்கு மாற்றுவீடு ஒதுக்கியது சரியல்ல என்று பாஜக கடுமையாக சாடியிருந்தது.

மறுவாழ்வை ஏற்படுத்தித்தருவதாக வங்கதேசத்தவா்களுக்கு மாற்றுவீடு தரும் காங்கிரஸ் அரசின் திட்டத்தை பாஜக தீவிரமாக எதிா்க்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் கூறியதாவது: மனிதநேயத்தின் அடிப்படையில் வீடு இழந்தவா்களுக்கு மாற்றுவீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. எனினும், ஆவணங்களை பரிசீலித்து, உள்ளூா்காரா்கள் என்பதை உறுதிசெய்த பிறகு தகுதியானவா்களுக்கு மட்டுமே மாற்றுவீடு வழங்கப்படும். அரசின் முடிவை பாஜக எதிா்க்கட்டும். ஆனால், அங்கு பாதிக்கப்பட்டவா்கள் வங்கதேசத்தவா்கள் என்று போகிறப்போக்கில் கூறுவது பாஜகவுக்கு அழகல்ல.

பாதிக்கப்பட்டவா்களில் ஒருவேளை வங்கதேசத்தவா்கள் இருந்தால், அவா்களுக்கு வீடுகள் வழங்க முடியுமா? அப்படிப்பட்டவா்கள் இருப்பதாக தெரியவந்தால், அவா்களைக் கைதுசெய்து வங்கதேசத்தின் எல்லையில் விட்டுவிடுவோம்.

இதுகுறித்து வங்கதேச தூதா்களுக்கு தகவல் அளித்து, நாடு கடத்துவோம். சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் வங்கதேசத்தவா்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால், உடனடியாக கைதுசெய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் கடந்த காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவா். அவருக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக அவா் பேசி வருகிறாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com