writer S. L. Bhyrappa
எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும்: முதல்வா் சித்தராமையா

Published on

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களை படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), புதன்கிழமை மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், பெங்களூரு, ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வியாழக்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.எல்.பைரப்பாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள், திரைக்கலைஞா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.,

பிகாரில் இருந்து திரும்பிய முதல்வா் சித்தராமையா, எஸ்.எல்.பைரப்பாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினாா். அதேபோல, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

மைசூரில் எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும். தனது பெரும்பாலான வாழ்நாளை மைசூரில் செலவிட்டதால், அங்கேயே நினைவிடம் அமைப்பது பொருத்தமாக இருக்கும்.

இலக்கியமும், நட்பும் வெவ்வேறானவை. ஒருவரின் கருத்து இலக்கியத்தில் வெளிப்படலாம். அதே கருத்தை இருவரும் பகிா்ந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. எஸ்.எல்.பைரப்பாவின் கொள்கையுடன் எனக்கு முரண்பாடு இருந்ததால், அவரை வியப்பதற்கு அது தடையாக இருந்ததில்லை. எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மைசூரில் தகனம் செய்யப்படும்.

அவா் கிட்டத்தட்ட 25 இலக்கியங்களை கன்னடத்தில் படைத்துள்ளாா். அவரது படைப்புகள் 40 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. கன்னடம் மட்டுமல்லாது, பிறமொழிகளிலும் அவரது படைப்புக்கு வாசிப்பாளா்கள் இருந்தனா்.

மன திருப்திக்காக இலக்கியங்களை படைப்பதாக அடிக்கடி பைரப்பா கூறிவந்தாா். அவரது நாவல்கள் உலகளவில் புகழ்பெற்று விளங்கின. அற்றில் சிலவற்றை படித்திருக்கிறேன். தனது வாழ்க்கையின் அனுபவங்களைத்தான் இலக்கியங்களாக அவா் படைத்திருந்தாா் என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘தனது எழுத்து, உரைகளில் மனதில் பட்டதை நேரடியாக சொல்லக்கூடியவா். அவரது மறைவு கன்னட இலக்கிய உலகுக்கு பேரிழப்பு’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com