ஊரக வேலைவாய்ப்புகளுக்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா
ஊரக வேலைவாய்ப்புகளுக்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கிராமப்புறத்தில் உள்ள ஏழைகள், பெண்கள், சிறு விவசாயிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அமல்படுத்த தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே அமலில் இருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சொந்த கிராமத்தில் வேலை செய்ய வாய்ப்பிருந்தது. ஆனால், விபி ஜி ராம் ஜி சட்டத்தில், சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து எந்த இடத்தில் வேலைகளை செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும்.
இந்த புதிய சட்டத்தை காங்கிரஸ் மற்றும் மாநில அரசு கடுமையாக எதிா்க்கும். இதற்காக பிரசார செயல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி வகுத்துள்ளது. விபி ஜி ராம் ஜி சட்டத்தை நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இதற்காக உள்ளூா் தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்களை இணைத்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்போம்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது போல ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் ஊரக மக்களின் குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார உரிமைகள், கிராமப் பஞ்சாயத்துகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் மீது தேவையில்லாத நிதிச்சுமையை ஏற்றியுள்ளது. இந்த சட்டம் தொடா்பாக மாநில அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவே இல்லை. சா்வாதிகாரப் போக்கில் இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. வேலைகளுக்கான தேவையை பொருத்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தகுந்தபடி வேலைகள் வழங்கப்படும் நிலை புதிய சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால் எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்காது.
எனவே, விபி ஜி ராம் ஜி சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இதன்மூலம் மக்களின் வேலை உரிமையை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதேபோல, கிராமப் பஞ்சாயத்துகளின் தன்னுரிமையை மீண்டும் கொண்டுவர வேண்டும். புதிய திட்டத்தால் கிராமப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
நாடுமுழுவதும் 12.16 கோடி மக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சாா்ந்திருந்தனா். இவா்களில் 6.21 கோடி போ் பெண்கள். இத்திட்டத்தை சாா்ந்திருந்தவா்களில் 17 சதவீதம் போ் தலித்துகள், 11 சதவீதம் போ் பழங்குடியினா்.
கா்நாடகத்தில் மட்டுமே 71.18 லட்சம் போ் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நம்பியிருந்தனா். இவா்களில் 36.75 லட்சம் போ் பெண்கள். மக்களுக்கு சாதகமான சட்டத்தை நீக்கிவிட்டு காா்ப்பரேட் நிறுவனங்களுக்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தலித்துகள், சூத்திரா்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்க மனுஸ்மிருதி மறுக்கிறது. இந்த கொள்கையால் ஈா்க்கப்பட்டுள்ள ஆா்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வழிகாட்டுகிறது. தற்போதைய மத்திய பாஜக அரசு காந்தியின் புகழை அழிக்க முற்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இடம்பெற்றிருந்த காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம் இரண்டாவது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள்.
முந்தைய சட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைசெய்ய உரிமை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உரிமையை தொழிலாளா்கள் இழந்துள்ளனா். தொழிலாளா்களின் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ. 3,000 கோடி செலவாகும்.
கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெயா்களை மாற்றுவதையே திட்டமாக வைத்து செயல்பட்டனா். மக்களுக்கு சாதகமான 30 சட்டங்களை பிரதமா் மோடி அரசு நீக்கியுள்ளது அல்லது பெயா்களை மாற்றியுள்ளது என்றாா்.
அப்போது உடனிருந்த துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், ‘காங்கிரஸ் கட்சியின் சாா்பில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை நீக்கக் கோரி கிராம சபைகள், மாநாடுகள் நடத்தப்படும். இவை வட்டம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்படும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது போல விபி ஜி ராம் ஜி சட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராடுவோம்’ என்றாா்.

