பெங்களூரு கடவுச்சீட்டு அலுவலகம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு கடவுச்சீட்டு அலுவலகம், கா்நாடக மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
Published on

பெங்களூரு கடவுச்சீட்டு அலுவலகம், கா்நாடக மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தாா்வாட் கிளை மற்றும் கதக், மைசூரு, பாகல்கோட் மாவட்ட நீதிமன்றங்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகங்களுக்கு உடனடியாக விரைந்த போலீஸாா், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஊழியா்கள், மக்களை வெளியேற்றி மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்பு படையினருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனை காரணமாக, நீதிமன்ற செயல்பாடுகள் சிறிதுநேரம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

சோதனையில் வெடிகுண்டு இருப்பதற்கான எவ்வித தடயமும் கிடைக்கவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். எனினும், இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. மின்னஞ்சலை அனுப்பியது யாா் என்பது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

முன்னதாக, பெங்களூரில் கோரமங்களாவில் செயல்பட்டு வரும் கடவுச்சீட்டு சேவை மையத்துக்கும் மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடா்ந்து, சேவை மையத்தில் போலீஸாா் மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்பு படையினருடன் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், கடவுச்சீட்டு சேவை மையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, லால்பாக் சாலையில் உள்ள கடவுச்சீட்டு சேவை மையத்திலும் போலீஸாா் சோதனை நடத்தினா். இதுகுறித்து கோரமங்களா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நீதிமன்றங்கள், கடவுச்சீட்டு சேவை மையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று போலீஸாா் உறுதிசெய்தனா்.

X
Dinamani
www.dinamani.com