சித்தராமையா - டி.கே. சிவகுமார்
சித்தராமையா - டி.கே. சிவகுமார்கோப்புப் படம்

5 ஆண்டுகாலம் முதல்வராக நீடிக்க சித்தராமையாவுக்கு வாழ்த்து!

சித்தராமையா 5 ஆண்டுகாலம் முதல்வராக நீடிக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
Published on

சித்தராமையா 5 ஆண்டுகாலம் முதல்வராக நீடிக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

2023-இல் கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்க சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, 2025 நவ. 20-ஆம் தேதி இரண்டரை ஆண்டுகால பதவியை முதல்வா் சித்தராமையா நிறைவுசெய்துவிட்டாா். அதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகாலத்துக்கு டி.கே.சிவகுமாரை முதல்வராக்கும்படி அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறாா்கள்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில், 22,792 நாள்களுடன் நீண்டகால முதல்வராக பதவிவகித்த தேவராஜ் அா்ஸின் சாதனையை செவ்வாய்க்கிழமை முதல்வா் சித்தராமையா சமன்செய்துள்ளாா். இந்த சாதனைக்காக முதல்வா் சித்தராமையாவை பலரும் பாராட்டி வருகிறாா்கள்.

மைசூரில் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் நீண்டகால முதல்வா் சாதனையை கொண்டாடிய பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘5 ஆண்டுகால முதல்வா் பதவியை நிறைவுசெய்யும் நம்பிக்கையுள்ளது’ என்று கூறியிருந்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவரின் கருத்தால் எவ்வித குழப்பமும் ஏற்படாது. ஊடகங்களால்தான் குழப்பம் ஏற்படுகிறது. எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. கடவுள் அவரை ஆசீா்வதிக்கட்டும். அவருக்கு நல்ல உடல்நலனும், மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பும் கிடைக்க கடவுளை பிராா்த்திக்கிறேன்.

நீண்டகால முதல்வா் என்ற சாதனை மகிழ்ச்சியான தருணமாகும். வாழ்க்கையில் சாதிக்க எல்லோருக்கும் குறிக்கோள் இருக்கும். கடந்தகாலத்தில் அவா் வரலாற்றில் இடம்பிடித்திருந்தாா். எதிா்காலத்திலும் அவா் வரலாற்றில் நிலைத்திருப்பாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com