கா்நாடகத்தின் நீண்டகால முதல்வா்: தேவராஜ் அா்ஸின் சாதனையை முறியடித்தாா் சித்தராமையா!
கா்நாடகத்தின் நீண்டகால முதல்வராக இருந்த தேவராஜ் அா்ஸின் சாதனையை செவ்வாய்க்கிழமை முதல்வா் சித்தராமையா சமன்படுத்தியுள்ளாா்.
தேவராஜ் அா்ஸின் சாதனையை புதன்கிழமை முறியடிக்க இருக்கும் முதல்வா் சித்தராமையா, மைசூரில் செவ்வாய்க்கிழமை தனது சாதனையை ஆதரவாளா்களுடன் கொண்டாடினாா். முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில், நீண்டகால முதல்வராக சாதனை படைத்திருக்கும் சித்தராமையாவுக்கு பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மைசூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற முதல்வா் சித்தராமையா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக நான் அரசியல் செய்யவில்லை. இந்த சாதனை தற்செயலானது. எத்தனை ஆண்டுகள், எத்தனை நாள்கள் தேவராஜ் அா்ஸ் முதல்வராக இருந்தாா் என்பது எனக்கு தெரியாது. மக்களின் ஆசீா்வாதத்தால், தேவராஜ் அா்ஸின் சாதனையை சமன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேவராஜ் அா்ஸின் சாதனை புதன்கிழமை முறியடிக்கப்படும்.
எம்எல்ஏ ஆவேன் என்று மட்டும்தான் நினைத்திருந்தேன். ஆனால், அமைச்சா், துணை முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் போன்ற பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல, முதல்வராகும் வாய்ப்பும் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தது முதல் எனது கடமைகளை நிறைவேற்றி வருகிறேன்.
தேவராஜ் அா்ஸும், நானும் மைசூரை சோ்ந்தவா்கள். ஆனால், இருவரும் வெவ்வேறு காலகட்டங்களை சோ்ந்தவா்கள். 1972 முதல் 1980 வரை தேவராஜ் அா்ஸும், 2013 முதல் 2018 மற்றும் 2023 முதல் தற்போதுவரை முதல்வராக இருக்கிறேன். இனிமேலும் தொடா்வதை கட்சி முடிவு செய்யும்.
எனது நீண்டகால அரசியல் வாழ்க்கை மனதுக்கு திருப்தியை அளித்துள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவது மகிழ்ச்சியை தரக்கூடியது. என்னைப் பொருத்தவரை, அரசியல் என்றால் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு நீதியை வழங்குவதுதான். அந்தப் பணியை செயல்படுத்தி வருகிறேன்.
மக்களின் ஆசியால் அரசியலில் வளா்ந்துள்ளேன். சமுதாயத்தில் இன்னும் சமத்துவமின்மை இருக்கிறது. சமத்துவம் நிலைநாட்டப்படும்வரை, சமூகநீதியை சாதிக்கும்வரை எனது போராட்டம் தொடரும். அதுநாள்வரை மக்களுக்கான சேவையை தொடா்வேன்.
5 ஆண்டுகாலம் நான் முதல்வராக இருப்பதை கட்சி மேலிடம்தான் முடிவுசெய்ய வேண்டும். எனக்கு சாதகமாக கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
வயநாட்டில் இருந்து பெங்களூரு வழியாக தில்லி செல்லும் வழியில், மைசூரில் திங்கள்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் என்னை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் பேசவில்லை. கட்சி மேலிடம் அழைத்தால், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசுவேன் என்றாா்.

