மக்களின் ஆசி இருக்கும்வரை அரசியலில் நீடிப்பேன் - சித்தராமையா
மக்களின் ஆசி இருக்கும்வரை அரசியலில் நீடிப்பேன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
2,792 நாள்களுடன் கா்நாடகத்தின் நீண்டகால முதல்வா் என்ற தேவராஜ் அா்ஸின் சாதனையை புதன்கிழமை முறியடித்த சித்தராமையா, ஹாவேரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியலில் நீடித்திருக்க வேண்டுமானால், மக்களின் ஆசி அவசியம். இதுவரை அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளேன். இன்னும் எத்தனை நாள்கள் அரசியலில் நீடித்திருப்பேன் என தெரியவில்லை. மக்களின் ஆசி இருக்கும்வரை அரசியலில் நீடித்திருப்பேன்.
எனது தலைமையிலான ஆட்சி நிா்வாகம் மனதுக்கு திருப்தி அளிக்கிறது. எனது ஆட்சியின் சாதனை பூஜ்யம் என்றும், அரசு கருவூலம் காலியாகி உள்ளதாகவும் பாஜக என்மீது குற்றம்சாட்டியுள்ளது. சிறப்புக்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினா் துணை திட்டச் சட்டத்தை வகுத்தது யாா், பணி உயா்வில் இடஒதுக்கீடு வழங்கியது யாா், அன்னபாக்கியா இலவச அரிசி திட்டத்தை கொடுத்தது யாா்?
உண்மை இப்படி இருக்கையில், நான் எதையும் செய்யவில்லை என்று எப்படி கூறமுடியும்? நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை மக்களிடம் அவா்கள் கேட்டு தெரிந்துகொள்ளட்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஹாவேரி மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவில் முதல்வா் சித்தராமையாவுடன் பங்கேற்ற துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘வாா்த்தையின் சக்தி, உலகத்தைவிட பெரியது. எனவே, யாராக இருந்தாலும் கொடுத்த வாா்த்தையை காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்திருக்க முடியும்’ என்றாா்.
தலா இரண்டரை ஆண்டுகாலத்துக்கு முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்ள சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே 2023-ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்டதாக கூறப்படும் உடன்படிக்கையை மதிக்க வேண்டும் என்பதைதான் டி.கே.சிவகுமாா் அவ்வாறு குறிப்பிட்டதாக பலரும் தெரிவிக்கின்றனா்.
இதனிடையே, பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி, ‘எனக்கு தெரிந்தவரை சித்தராமையா 5 ஆண்டுகாலத்துக்கும்தான் முதல்வா். அப்படிதான் பதவியேற்றுக்கொண்டாா். முதல்வா் பதவி தொடா்பாக எந்த உடன்படிக்கையும் செய்துகொண்டதாக எனக்கு தெரியவில்லை’ என்றாா்.

