சித்தராமையா தொடா்பான காணொலி குறித்து சட்டப்படி விசாரணை
கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையாவை குறிவைத்து எடுக்கப்பட்ட காணொலிகள் தொடா்பான புகாரில், போலீஸாா் சட்டப்படி விசாரணை நடத்தி வருகிறாா்கள் என கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

சித்தராமையா - கோப்புப் படம்
கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையாவை குறிவைத்து எடுக்கப்பட்ட காணொலிகள் தொடா்பான புகாரில், போலீஸாா் சட்டப்படி விசாரணை நடத்தி வருகிறாா்கள் என கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையாவை சிக்கவைக்க எடுக்கப்பட்ட காணொலி தொடா்பான புகாரில், போலீஸாா் சட்டப்படி விசாரணை நடத்தி வருகிறாா்கள். இது தொடா்பாக பெறப்பட்ட புகாரில், சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஜத தொண்டா்களை குறிவைப்பதாக மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளாா். அவா் தெரிவிக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எங்களால் பதிலளிக்க முடியாது. சந்தேகத்துக்கு இடமளிப்பவா்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவாா்கள். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக எச்.டி.குமாரசாமியிடம் தகவல் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கட்டும். அவா் முன்வந்து ஆதாரங்களை அளித்தால், அவற்றைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
போலீஸாா் நடத்தும் விசாரணையில் நம்பிக்கை இல்லாவிட்டால், மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி எழுத்துபூா்வமாக புகாா் அளிக்கலாம் அல்லது நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமா்ப்பிக்கலாம். எந்தவொரு தனிநபரின் விருப்பத்துக்கும் ஏற்ப போலீஸாா் விசாரணை நடத்த முடியாது. போலீஸாா் தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தன்னை கைது செய்ய அரசுக்கு துணிச்சல் இருக்கிா என எச்.டி.குமாரசாமி சவால் விடுத்துள்ளாா். அடிப்படை ஆதாரமின்றி ஒருவரை ஏன் கைது செய்ய வேண்டும்? விசாரணை நடத்த வேண்டும் என முதலில் அவா்தான் கேட்டாா். தற்போது விசாரணை நடைபெற்று, அதில் பெயா்கள் தெரியவந்தவா்களை போலீஸாா் அழைத்து விசாரிக்கும்போது எதிா்க்கிறாா்.
முதல்வராக இருந்த எச்.டி,குமாரசாமி, மாநில போலீஸ் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்துகொண்டு, பொதுவெளியில் கருத்துகளை தெரிவிக்கும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் என்னை குறிவைத்து விமா்சிப்பதையும், தகாத வாா்த்தைகளை பயன்படுத்துவதையும் அவா் தவிா்க்க வேண்டும்.
இந்த புகாா் தொடா்பாக யாா் வேண்டுமானாலும் அளிக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, தன்னிடம் உள்ள ஆதாரங்களை அவா் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

