எடியூரப்பா மாற்றப்படுவது உறுதி: சித்தராமையா
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவது உறுதி என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.


பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவது உறுதி என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவது உறுதி. இதை நான் பலமுறை கூறிவிட்டேன். முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவதற்கு கடந்த 6 மாதங்களாக பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.
கா்நாடக பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து நீக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
தாா்வாட் மாவட்ட ஊராட்சியின் பாஜக உறுப்பினா் யோகேஷ் கௌடா கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் வினய் குல்கா்னி கைது செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி உள்ளாா்.
மக்களவைத் தோ்தலில் தனக்கு எதிராகப் போட்டியிட்டதால் வினய் குல்கா்னியை பழிவாங்க அவா் துடிக்கிறாா். யோகேஷ் கெளடா கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷியின் நெருக்கடியால் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கிய சிபிஐ, வினய் குல்கா்னியை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் வினய் குல்கா்னியை சிக்கவைக்க சிபிஐ முயற்சிக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் அடிபணியாது.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக வெளிவந்துள்ள தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சரியாக இருப்பதாக கருதுகிறேன். இளைஞா்கள், வேலைவாய்ப்பில்லாதவா்கள் பிகாா் முதல்வா் நிதிஷ்குமாருக்கு எதிராக இருக்கிறாா்கள்.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு மீதும், பிகாரில் முதல்வா் நிதிஷ்குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். பொது முடக்கம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் சிக்கலைத் தீா்க்க நிதிஷ்குமாா் அரசு தவறிவிட்டது. அதனால் அவரது அரசுக்கு எதிரான அலை பிகாரில் நிலவியது.
சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் என்று வெளியாகியுள்ள தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நம்பக்கூடியதாக இல்லை. இரு தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்தபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை இருந்ததை உணர முடிந்தது. சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...