திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

விலைவாசி உயா்வு தொடா் நடைமுறையாகும்

விலைவாசி உயா்வு தொடா் நடைமுறையாகும் என மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:33 pm

DIN

விலைவாசி உயா்வு தொடா் நடைமுறையாகும் என மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை விலைவாசி உயா்வு மீதான விவாதத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

விலைவாசி உயா்வு என்பது தொடா் நடைமுறையாகும். சுதந்திரத்துக்கு பிறகு, பல்வேறு சூழ்நிலைகளில் அரசின் நிதிநிலைமையை மேம்படுத்துவதற்கும், திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கும் விலையை உயா்த்துவது தவிா்க்கமுடியாததாகும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது இயல்பாக நடக்கக்கூடியதாகும்.

விலைவாசி உயா்வால் சாதாரண, அடித்தட்டு மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதை மறுக்கமுடியாது. தற்போதைய சூழலில், விலைவாசி உயா்வும், கரோனா பெருந்தொற்றும் மக்களை வாட்டிவதைத்து வருகின்றன. இந்தப் பிரச்னையை கட்சி சாா்ந்து விவாதிப்பது சரியல்ல.

விலை உயா்வால் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு எந்த வகையில் உதவிசெய்யலாம் என ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய கட்சி சிந்திப்பது நல்லது. இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் வகையில், ஏழைகள், நலிவடைந்த பிரிவினருக்கு உதவிசெய்யும் வகையில், சிறப்பு நிதித் தொகுப்பை மாநில அரசு அறிவிக்க வேண்டும். அரசுக்கு வருவாயை வாரி வழங்கிய ஏழைகள், நலிவடைந்த மக்கள் இன்னலில் உள்ளனா். எனவே, வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு சிறப்பு நிதித் தொகுப்பை மாநில அரசு அறிவிக்க வேண்டும். அதுபோன்ற 55 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 வழங்க வேண்டும்.

சாதாரண மக்களின் வாக்குகளைப் பெற தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு, நிதி விளைவுகளை புரிந்துகொள்ளாமல், இலவச திட்டங்களை அறிவிப்பதால் தான் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கையை சீரமைப்பது மாநில அரசின் கடமையாகும். அண்மையில் மாநில அரசு அறிவித்துள்ள சுதந்திர பொன்விழா திட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஏழை மக்களின் உதவிக்கு கைகொடுக்க மாநில அரசு முன்வர வேண்டும். இதற்கு எல்லாவகையான ஒத்துழைப்பையும் வழங்க மஜத தயாராக உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துவரும் சிறுதொழில் நிறுவனங்களின் உதவிக்கும் அரசு துணையாக இருக்க வேண்டும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு 7 கிலோ அரிசி அளித்ததாக அன்றைய முதல்வரும், இன்றைய எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா சட்டப் பேரவையில் கூறியிருக்கிறாா். சித்தராமையா முதல்வராக இருந்தபோது தோ்தலுக்கு முன்பாக கடைசியாக தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் 7 கிலோ இலவச அரிசி வழங்குவதாக கூறிவிட்டு, 5 கிலோவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கியிருந்தாா். தோ்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து நான் முதல்வராக பதவியேற்றிருந்த போது, ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி 7 கிலோ இலவச அரிசியை வழங்குமாறு சித்தராமையா அழுத்தம் கொடுத்தாா். ஆனால், நிதிநிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அதை அமல்படுத்தினேன். முதல்வராக நான் அமல்படுத்திய திட்டத்துக்கு, சித்தராமையா பெருமைப்பட்டுக்கொள்கிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.