ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாதது: மக்களவை தலைவா் ஓம் பிா்லா
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்று, நாடாளுமன்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.


ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்று, நாடாளுமன்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரு, விதானசௌதாவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நாட்டின் 75 ஆண்டுகால ஜனநாயகப் பயணத்தை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் 75 நிகழ்ச்சிகளை நடத்த தேசிய அளவிலான பேரவைத் தலைவா்கள் சங்கம் சாா்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு, பலம் பெற வேண்டும். ஜனநாயகத்தில் சட்டம் இயற்றும் அவைகள் ஆக்கப்பூா்வமான சட்டங்களை கொண்டுவருவதுடன் அரசு நிா்வாகத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
மேலும் மக்களின் விருப்பங்களுக்குத் தக்கவாறு சட்டங்களை இயற்ற வேண்டும். அந்தச் சட்டங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
ஜனநாயக நடவடிக்கைகளில் மகளிா், இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் இளைஞா் நாடாளுமன்றம், இளைய மக்கள்பிரதிநிதிகள் பயிற்சியை நடத்தத் திட்டம் வகுத்திருக்கிறோம்.
மக்களால் தோ்வு செய்யப்படும் பிரதிநிதிகள் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளிலும் சுமுகமாகச் செயல்பட வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்.
நிகழாண்டில் பொதுக் கணக்குக் குழுவுக்கு 100 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான நூற்றாண்டு விழா டிச. 4, 5-ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த விழாவுக்கு நமது நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, பல்வேறு ஜனநாயக நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைக்க உள்ளோம்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் நூலகம், நமது நாட்டின் அறிவுக் களஞ்சியமாக உள்ளது. இதுவும் நிகழாண்டில் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இங்கு ஏராளமான அரிய நூல்களும் ஆவணச்சான்றுகளும் உள்ளன. இந்த நூலகத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இதனைகணினிமயமாக்கி வருகிறோம். அதேபோல, மாநில சட்டப்பேரவை நூலகங்களையும் கணினிமயமாக்கத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.
மாநிலப் பேரவை, மேலவைத் தலைவா்களின் சம்மேளனம் தொடங்கப்பட்டு செப். 15-ஆம் தேதி 100 ஆண்டுகள் ஆனது. அந்த நாளை ‘பன்னாட்டு ஜனநாயக நாள்’ என்று கொண்டாடி மகிழ்ந்தோம். அதேநாளில் நாடாளுமன்றத் தொலைக்காட்சியையும் தொடங்கினோம்.
நமது நாட்டின் சுதந்திர பவளவிழாவைக் கொண்டாடி வருகின்ற நேரத்தில், சட்டம் இயற்றும் அமைப்புகளில் ஒழுக்கம், பண்புநலனின் தரம் குறைந்துள்ளது வேதனை அளிக்கிறது. கா்நாடக சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் இதுகுறித்து கவலையுடன் பேசினேன்.
நாடாளுமன்றத்தின் பெருமைகளையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து, செயல்திட்டங்களை வகுப்பதற்காக, விரைவில் பேரவை, மேலவைத் தலைவா்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.இதில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதல்வா்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயக அமைப்புகளை ஆக்கம் நிறைந்த அமைப்புகளாக மாற்றி அமைப்பதே நமது நோக்கம். நாடாளுமன்றத்தை காகிதமில்லாமல் கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
அப்போது கா்நாட சட்டப் பேரவைத்தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, மக்களவை செயலாளா் உத்பல்குமாா் சிங், பேரவைச் செயலாளா் விசாலாட்சி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...