நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நேஷனல் ஹெரால்டு ஆங்கில நாளேடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் தவித்தபோது, அந்நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கியிருந்தது. அந்த கடனை அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தால் திரும்பச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோா் இயக்குநா்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தால் ரூ.90.25 கோடி கடனுக்கு சமமான பங்குகளை பெற்றுள்ளதால், இதில் நிதி மோசடி நடந்திருப்பதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறை, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.