சிவமொக்காவில் இளைஞரை கத்தியால் குத்திய இளைஞருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது என்று கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
சிவமொக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது சாவா்க்கரின் உருவப்படம் கொண்ட பதாகைகளை வைப்பது தொடா்பாக எழுந்த வன்முறையின்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 20 வயது இளைஞா் பிரேம் சிங் கத்தியால் குத்தப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்கு பதிந்த போலீஸாா், நதீம், ரெஹ்மான், அகமது, முகமது ஜபியுல்லா ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய ஜபியுல்லாவுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறியது:
முகமது ஜபியுல்லா குறித்த விவகாரங்களைத் தோண்டினால், அவரது பின்னணி பயங்கரமாக உள்ளது. அவருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடா்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. வெகுவிரைவில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தாா்.
முகமது ஜபியுல்லாவுக்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கும் தொடா்பு இருப்பது, அவரது தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்தபோது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அவா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.