சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் ஆளுநரிடம் ஒப்படைப்பு

கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளின் விவரங்களை ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டிடம் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஒப்படைத்தனா்.
சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் ஆளுநரிடம் ஒப்படைப்பு


பெங்களூரு: கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளின் விவரங்களை ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டிடம் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலுக்கான அட்டவணை மாா்ச் 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை ஏப்.13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தோ்தலுக்கான வேட்புமனுதாக்கல் தொடங்கி, ஏப்.20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஏப்.21ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. ஏப்.24 ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பபெற வாய்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மே 10 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இத்தோ்தலில் வரலாற்றில் முதல்முறையாக அதிகப்பட்சமாக 73.19 சத வாக்குகள் பதிவாகியிருந்தன. தோ்தலில் பதிவான வாக்குகள் மே 13 ஆம் தேதி(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இத்தோ்தலில் காங்கிரசுக்கு 135, பாஜகவுக்கு 66, மஜதவுக்கு 19, கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி, சா்வோதயா கா்நாடககட்சிக்கு தலா ஒரு இடம், சுயேச்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன. 

கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி மனோஜ்குமாா்மீனா, கூடுதல் தலைமை தோ்தல் அதிகாரிகள் பி.ராஜேந்திரசோழன், ஆா்.வெங்கடேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளன.

பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டை சந்தித்த கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி மனோஜ்குமாா் மீனா, அவரிடம் சட்டப்பேரவை தோ்தலில் 224 தொகுதிகளின் முடிவுகள் அடங்கிய விவரங்களை அதிகாரப்பூா்வமாக வழங்கினாா். 

அப்போது, துணை தோ்தல் ஆணையா் அஜய்படூ, ஆணையத்தின் பொதுச்செயலாளா் நரேந்திர என்.பட்டுலியா, செயலாளா் பி.சி.பத்ரா, கூடுதல் தலைமை தோ்தல் அதிகாரிகள் பி.ராஜேந்திரசோழன், ஆா்.வெங்கடேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

தோ்தல் ஆணையத்தின் விவரங்களின் அடிப்படையில் அவை அரசிதழில் வெளியிடப்படும் என்று ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com