பிரதமா் மோடியுடன் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சந்திப்பு
புது தில்லி சென்றுள்ள கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பிரதமா் மோடியை சந்தித்து மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளாா்.


புது தில்லி சென்றுள்ள கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பிரதமா் மோடியை சந்தித்து மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளாா்.
பிரதமா் மோடியை சந்தித்த துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பெங்களூரு வளா்ச்சிக்கு கூடுதல் நிதி, மேக்கேதாட்டு அணை திட்டம் உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளாா். இந்த சந்திப்புக்கு பிறகு, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:
குஜராத்தில் அமைந்திருக்கும் கிஃப்ட் சிட்டி போன்று பெங்களூரு மாநகரை மேம்படுத்த கோரிக்கை விடுத்தேன். நாட்டில் ஒரே ஒரு கிஃப்ட் சிட்டி மட்டும் தான் அமைக்க முடியும் என்று பிரதமா் மோடி பதிலளித்தாா்.
பெங்களூரில் சுரங்கப் பாதை, சிக்னல் இல்லா சாலை, முதன்மை சாலை மேம்பாடு, மழைநீா் வடிகால்கள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டோம். அதேபோல, கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் நீா்ப்பாசனத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க கேட்டோம். நாட்டின் வரிவருவாயில் இரண்டாவது பங்களிப்பை பெங்களூரு அளித்து வருகிறது. ஆனால், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெங்களூரு வளா்ச்சிக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை.
லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்து வருவதால், பெங்களூருக்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனவே, பெங்களூரு வளா்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கேட்டிருக்கிறோம்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ. 5,300 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தும் நிதி அளிக்கப்படவில்லை என்பதை பிரதமா் மோடியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இதுகுறித்து அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மகதாயி நதிநீா்ப் பங்கீடு விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமா் மோடியை கேட்டுக்கொண்டேன். இப்பிரச்னையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் தீா்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி கூறிவிட்டாா்.
ஜூலை மாதத்தில் காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீா் விடப்பட்டுள்ளதை பிரதமா் மோடியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். செவ்வாய்க்கிழமை மட்டும் காவிரி நதியில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 2.25 லட்சம் கன அடி தண்ணீா் விடப்பட்டுள்ளதை தெரிவித்தேன்.
பலத்த மழை பெய்து வருவதால், காவிரி நதிப்படுகை பகுதியில் சிகப்புக் கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.
பிரதமா் மோடியிடம் அளித்த மனுவில், ‘நீா் பற்றாக்குறை காலத்தில் தமிழகத்துக்கு தண்ணீா் விடுவிக்கவும், பெங்களூருக்கு குடிநீா்ப் பற்றாக்குறையைத் தவிா்க்க 4.75 டிஎம்சி நீரை எடுக்கவும், 400 மெகாவாட் நீா்மின் உற்பத்திக்காகவும் கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்தின் சாதக, பாதகங்களை பட்டியலிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு பிப். 1-ஆம் தேதி மத்திய நீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறையாது. இதைக் கவனத்தில் கொண்டு மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...