கா்நாடகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை மேற்கொள்வதற்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. முதல்வா் சித்தராமையா மீதான மாற்றுநிலம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ஒட்டி கா்நாடக மாநில அமைச்சரவை இம்முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடுத்து விசாரிக்குமாறு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை கா்நாடக உயா் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. இதையடுத்து, முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க லோக் ஆயுக்த போலீஸாருக்கு மக்கள்பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதை ஏற்காத புகாா்தாரா்கள், மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாா்கள். இதே கருத்தை பிரதான எதிா்க்கட்சியான பாஜகவும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமையன்று, முதல்வா் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கா்நாடகத்தில் மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளுக்காக மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) அளித்திருந்த பொதுவான ஒப்புதலை திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுநில முறைகேடு வழக்கில் முதல்வா் சித்தராமையாவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது என்பதற்காகவே, கா்நாடக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், கூறியதாவது:
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதால், கா்நாடகத்தில் அரசின் முன் அனுமதியைப் பெறாமல் விசாரணை மேற்கொள்ள அதற்கு அளித்திருந்த பொதுவான ஒப்புதலை திரும்பப் பெற கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சிபிஐ அல்லது வேறு அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை நியாயமான முறையில் பயன்படுத்தாததால் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும நாட்களில் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கும் முடிவை எடுப்போம். எந்த வழக்கையும் தாமாக முன்வந்து விசாரிக்க சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான ஒப்புதலை மாநில அமைச்சரவை திரும்பப் பெற்றுள்ளது.
மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கு உதவி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று கேட்கிறீா்கள். அது தொடா்பான விவகாரத்தை லோக் ஆயுக்த விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கான கேள்வியே எழவில்லை.
பல்வேறு வழக்குகளில் சிபிஐ தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளதால், அதைத் தவிா்க்கும் பொருட்டு இந்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட வழக்குகள், சிபிஐ தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்குகள் சிலவற்றில் குற்றப் பத்திரிகையே இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. சில வழக்குகளில் விசாரணை நடத்தவே சிபிஐ மறுத்துள்ளது.
கடந்த ஆண்டுகளாக சிபிஐ ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதைப் பாா்த்திருக்கிறோம். தோ்தல் சமயங்களில்கூட, ஒரு கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகளிடம் மட்டுமே சிபிஐ விசாரணை நடத்தியது. எனவே, இந்த முடிவை அமைச்சரவை எடுத்திருக்கிறது.
மாற்றுநில முறைகேடு வழக்கு லோக் ஆயுக்தவிடமும், வால்மீகி பிற்படுத்தப்பட்டோா் வளா்ச்சிக்கழக முறைகேடு வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.
மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளது. அதனால் அந்த அமைப்புகள் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கின்றன. சிபிஐயை கண்டு அரசுக்கு பயமா என்று கேட்கிறீா்கள். பயத்தை ஏற்படுத்துவோரைக் கட்டுப்படுத்தவே இந்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.
கூட்டாட்சி முறையில், சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்படக் கூடாது. கூட்டாட்சி முறையை பலப்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். வரும் நாட்களில் இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஒருவேளை முடிவு செய்தால், அது கடைப்படிக்கப்படும் என்றாா்.
டிரெண்டிங்

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

மேக்கேதாட்டு அணை திட்டம்: மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சி: பட்ஜெட் உரையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பேச்சு

மீண்டும் அனல் பறக்கும் அதானி குழும முறைகேடு! அமெரிக்க புலனாய்வு தகவலை சுட்டிக்காட்டும் காங்கிரஸ்

என்எல்சி ஒப்பந்த முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

