

சென்னை, செப். 3: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 384 பஸ்களை இதர போக்குவரத்துக் கழகங்களிடம் ஒப்படைக்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் விரைவு போக்குவரத்துக் கழகம் மேலும் சுருங்கி பின்னடைவைச் சந்திக்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 20 பணிமனைகள், 928 பஸ்களுடன் இயங்கி வருகிறது.
தினமும் ரூ. 1 கோடி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், விரைவு போக்குவரத்துக் கழகமோ இதில் நிதானமாகச் செயல்படுகிறது.
இதற்கு அரசின் தவறான கொள்கை முடிவுகளே காரணம் என்று தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி சென்னை தரமணியில் ஐஆர்டி வளாகத்தில் நடைபெற்ற, அனைத்து போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதன்படி விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழகத்துக்குள் பல்வேறு இடங்களுக்கு இதுவரை இயக்கி வந்த 384 பஸ்களையும், வழித்தடங்களையும் இதர போக்குவரத்துக் கழகங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது.
இந்த விரைவு பஸ்களை பராமரித்து, இயக்குவதில் பணியாற்றிய 2,497 ஊழியர்களையும் மதுரை, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம் ஆகிய அரசு போக்குவரத்துக் கழகக் கோட்டங்களுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை மோசமடையும் ஆபத்து ஏற்பட்டது.
ஆனால், பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அடுத்து, இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
மீண்டும், மீண்டும் முயற்சி: "நீறுபூத்த நெருப்பாக' இருந்து வந்த இப்பிரச்னை இப்போது மீண்டும் புகையத் தொடங்கியுள்ளது.
384 விரைவு பஸ்களை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களிடம் ஒப்படைக்க அரசு "ரகசிய' நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 25-ம் தேதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, தலைமையில் அனைத்து போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களின் கூட்டம் தரமணியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 384 பஸ்களை ஒப்படைக்கும் பிரச்னை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
போனஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு...
மேலும் செப். 4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான போனஸ் பேச்சுவார்த்தை கூட்டமும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொழிலாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறங்குமுகத்தில் விரைவு பஸ் கழகம்...
கடந்த 2.1.87-ல் வெளியான அரசாணையின் படி, தமிழகத்தில் 250 கிலோமீட்டருக்கு மேல் தூரமுள்ள இடங்களுக்கு பஸ்களை இயக்க, விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டுமே உரிமை உண்டு.
அரசு கடந்த ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு மிதவை பஸ்கள் மற்றும் சொகுசு பஸ்களையும் வழங்கியது.
ஆனால், இந்த பஸ்கள் அனைத்தும் அந்தந்த கோட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் நெரிசல் ஏன்?.. .
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு தினமும் 600 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கல் தினமும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேல் இயக்கப்படுகின்றன.
ஆனால், சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு தினமும் 460 விரைவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தினமும் 1000-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து, செல்வதால் நெரிசலும் தொடர்கிறது.
விரைவு பஸ்களுக்கு வேகக் கட்டுப்பாடு...
இந்த பஸ்களில் "பம்ப் லாக்' பொருத்தப்பட்டுள்ளதால், மணிக்கு 55 கிலோமீட்டருக்கு மேல் வேகமாகச் செல்ல இயலாது.
இதனால், விரைவு பஸ்களுக்கு போட்டியாக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களே இயக்கப்படும் நிலை உள்ளது. கட்டண விகிதத்திலும் குளறுபடி நிலவுகிறது.
இதனால், இவ்விரு கழக பஸ்களுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போக்குவரத்துக் கழகங்களுக்கு இடையே தொடரும் இந்த விநோதப் போட்டியால் ஆம்னி பஸ்களின் "காட்டில் தினமும் மழை'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.