காரைக்கால், ஆக.16: பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை; பிரெஞ்சு மொழியை முழுமையாக கற்றுத் தருவதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளின் காரணமாக, காரைக்காலில் செயல்படும் புதுவை அரசின் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் மிகக் குறைந்த அளவாக 52 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
பள்ளியில் நிலவும் குறைபாடுகளை களைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம், சந்திரநாகூர் ஆகியவை விடுதலை பெற்று, இந்தியாவுடன் இணைய முடிவெடுக்கப்பட்டபோது, 1954-ல் பிரெஞ்சு அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், புதுவையில் பிரெஞ்சு கலாசாரமும், மொழித் திறனும், கல்விச் சிறப்பும் எந்தவிதத்திலும் சீர்கேடு அடையக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பிரெஞ்சு ஆட்சியில் காரைக்கால் மாவட்டத்தில் படிக்கும் மாணவர்கள் உள்ளூரில் படித்தால் பிரெஞ்சு மொழியையே படிக்க வேண்டும். தமிழ் படிக்க வேண்டும் என்றால், புதுச்சேரியைச் சாராத அருகிலிருக்கும் இந்தியப் பகுதிகளான நாகூர், திட்டச்சேரி ஆகிய பகுதிகளுக்கு பாஸ்போர்ட் உடன் படிக்க வரவேண்டும் என்ற நிலையே இருந்தது.
இந்நிலையில், காரைக்கால் விடுதலையின்போது, காரைக்கால் மாணவர்கள் தொடர்ந்து பிரெஞ்சு மொழியை கற்க வேண்டும் என்ற பிரெஞ்சு அரசின் கோரிக்கையின்படி, பிராந்தியத்தில் ஆங்காங்கே "இகோல் சாந்திரால்' என்ற பெயரில் பள்ளிகளை நிறுவ இரு அரசுகளும் உடன்பாடு செய்துகொண்டன. பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்று, காரைக்காலில் வசிப்போருக்கு இது பேருதவியாக இருந்து வந்தது.
விடுதலைக்கு முன் காரைக்காலில் தொடங்கப்பட்ட "கொல்லேழ் மொதேர்ன்' என்ற பிரெஞ்சு கல்லூரி, விடுதலைக்கு பின் மாடர்ன் கல்லூரி என பெயர் மாற்றம் செய்து, அங்கு பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டு, தற்போது அது காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
இதேபோல், காரைக்கால் நகரின் மையப் பகுதியில் கூர் கொம்ப்ளே மாந்த்தேர் என்ற பெயரில் இயங்கி வந்து, தற்போது பிரெஞ்சு அரசு உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு தற்போது மூடுவிழா செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக பிரெஞ்சு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், இங்கு படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 52 மட்டுமே. 2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் 7 பேர், தலைமையாசிரியர் ஒருவர். அவர்களில் 5 பேருக்கு மட்டுமே பிரெஞ்சு மொழி தெரியும் என கூறப்படுகிறது.
புதுச்சேரியில் 2, மாஹே, காரைக்கால் ஆகியவற்றில் தலா ஒரு பிரெஞ்சுப் பள்ளி இயங்கினாலும், அதில் காரைக்கால் பள்ளியில் மட்டுமே குறைந்த எண்ணிகையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கு பள்ளியில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் சுட்டி காட்டுகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.
பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைவு; பள்ளியில் முதன்மைப் பாடமாக பிரெஞ்சு மொழியை படிக்கும் மாணவர்கள் இறுதி வகுப்புகளில் அந்த மொழியை முழுமையாக அறிந்து வெளியேறுவது இல்லை.
காரைக்கால் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் 52 மாணவர்களே படிப்பதற்கு என்ன காரணம், பள்ளியில் நிலவும் குறைபாடுகளை களைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதில் புதுவை அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
இந்தப் பள்ளி மட்டுமல்லாது, காரைக்கால் மாவட்டத்தில் அரசு சார்பிலான சில உயர் நிலைப் பள்ளிகளிலும் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. இங்கு மாணவர் சேர்க்கை அதிகளவிலேயே இருந்தபோதிலும், அவற்றில் ஒருசில பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்க என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை என்ற குறைபாடும் நிலவுகிறது.
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் பலர் காரைக்காலில் வசிப்பதால், தங்கள் குழந்தைகள் பிரெஞ்சு மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மேற்கூறிய பள்ளிகளில் சேர்த்தால் முழுமையான பலன் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனாலேயே, அலியான்úஸ பிரான்úஸ என்ற பெயரில் பிரெஞ்சு அமைப்பினர் நடத்தும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில் மாநில அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; என்றாலும், ஒட்டுமொத்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பிரெஞ்சு மொழியுடன் நெருங்கிய தொடர்பு உண்டு; பிரெஞ்சு மொழி தெரிந்தால்தான் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற புதுவை மக்கள் பிரான்ஸில் வசிக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது, புதுவை அரசு இந்த பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.