காரைக்காலில் கழிவு நீர் வடிவதில் புதிய உத்தி கையாளப்படுமா?

காரைக்கால், நவ. 14: புதை சாக்கடை இல்லாத நிலையில், காரைக்காலில் கழிவுநீர் செல்லும் சாக்கடையில் குப்பைகள் அடைத்து, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சல்லடை அமைப்
Updated on
2 min read

காரைக்கால், நவ. 14: புதை சாக்கடை இல்லாத நிலையில், காரைக்காலில் கழிவுநீர் செல்லும் சாக்கடையில் குப்பைகள் அடைத்து, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சல்லடை அமைப்பை ஏற்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆராய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

÷சுமார் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்கால் நகரப் பகுதியில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட சாக்கடைகளில் கழிவுநீர் தடையின்றி சென்று, சேர்ந்தது. இதனால், கழிவு நீர் வடிவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

÷ஆனால், இன்றோ சாலையோர ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் அதிகரிப்பு, இவற்றால் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்பு, கழிவுநீர் சென்று கலக்கும் பகுதிகள் குடியிருப்பு மனைகளாக்கப்பட்டது உள்ளிட்டவற்றால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.

÷இந்நிலையைப் போக்க சில ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது காரைக்கால் நகரப் பகுதி மக்கள்தொகை ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோது, புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 60 கோடிக்கான மதிப்பீட்டைத் தயார் செய்து மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியதாம். ஆனால், குறைவான மக்கள்தொகையைக் காரணம் காட்டி, புதை சாக்கடைத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

÷காரைக்கால் நகரப் பகுதியில் சாலைகள் குறுகியதாக இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால், புதை சாக்கடைத் திட்டம் இங்கு சாத்தியமாகாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டால் சாலைகள் உடைக்கப்பட்டு, சீரமைக்க சுமார் 10 ஆண்டுகள்கூட ஆகலாம். எனவே, புதை சாக்கடைத் திட்டம் தேவையில்லை என ஒருதரப்பு மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

÷இந்நிலையில், காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நகரில் 12 வார்டுகளில் தனியார் மூலம் குப்பைகளை அகற்றி வருகிறது. இதற்கு புதுவை அரசு மாதம் ரூ. 10 லட்சம் வரை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த பணியில் திருப்தியில்லை என புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் அவை கழிவுநீர் சாக்கடைகளில் கலந்துவிடுகின்றன என்கின்றனர்.

÷பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் சாக்கடையில் தண்ணீர் வடிவதில்லை என்பதால், இதன் பயன்பாட்டுக்கு புதுவை அரசு தடை விதித்தது. தடையைக் கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், பிளாஸ்டிக் உபயோகம் ஒரு சதம்கூட குறையவில்லை எனக் கூறும் சமூக ஆர்வலர்கள், பிளாஸ்டிக் பொருள்களும் கழிவு நீர் வடிவதை தடுக்கின்றன என்கின்றனர்.

சல்லடை முறை

÷தற்போதுள்ள சாக்கடைகளை ஆழப்படுத்தி, மையப் பகுதியில் சல்லடை (வலை) போன்ற அழுத்தமான தகடு பதித்தால், சாலையோரங்களில் உள்ள குப்பைகள் சாக்கடையில் சல்லடையின் மேல் தங்கி விடும். இதனால், தண்ணீர் கீழே வடிந்து எளிதில் சென்றுவிடும். பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது.

÷இந்த யோசனையின் அடிப்படையில், கழிவு நீரை வடியச் செய்வதில் புதிய மாதிரியை தயாரித்துள்ள கோட்டுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் துறை விரிவுரையாளர் எஸ்.சித்ரா கூறியது:

÷சாக்கடைக் கழிவுகள் சாலைகளில் செல்லாமல் கீழ்ப்பக்கமாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மேல் பகுதியில் பதிக்கப்படும் சல்லடையில் குப்பைகள் தங்கும்போது, அவற்றை தொழிலாளர்கள் எளிதில் அகற்றிவிட முடியும். இதனால், தொழிலாளர்களுக்கும் பணிப் பளு குறையும். சுற்றுச்சூழல் பாதிக்காது. கொசு உற்பத்தியை தடுக்க முடியும். இதற்கான சாத்தியக்கூறுகளை அரசு நிர்வாகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் காரைக்கால் மக்களுக்கு பயன் தரும் என்றார்.

÷இந்த முறையைச் சோதனை அடிப்படையில் சில பகுதிகளில் மேற்கொண்டு, திட்ட வெற்றியைப் பொருத்து பிற இடங்களிலும் அமைத்து, மக்களின் நலன் காக்க காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அரசை வலியுறுத்த வேண்டும் என்பதே இந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com