திருத்தணி, ஜன. 8: நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சிறப்பு முகாம் அண்மையில் தொடங்கியது. இதில் 20 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு முகாமில் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாடு சீர்செய்தல், முட்புதர்கள் அகற்றுதல், கிராம சாலை சீர்செய்தல், கிராமத்தில் உள்ள கோயில்களை சீர் செய்தல், முருகம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பு முகாமில் மாணவர்கள் செய்தனர்.
முகாமின் நிறைவு விழா செவ்வாய்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சி. புருஷோத்தமராஜு தலைமை வகித்தார். முருகம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் எம். முனுசாமி முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் ஆ. கருணாகரன் வரவேற்றார்.
இதில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி. புருஷோத்தமராஜு, முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழையும் வழங்கி நாட்டு நலப்பணி திட்டத்தில் ஈடுபடுத்தி கொண்ட மாணவர்கள் தாய் நாட்டுக்காக பாடுபடவேண்டும் என அறிவுரைக் கூறி மாணவர்களை பாராட்டி பேசினார்.
விழாவில் ஆசிரியர் முனுசாமி, உதவி திட்ட அலுவலர் டி. சின்ராஜ், ஆசிரியர் உமாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.