திருத்தணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திடீர் மாற்றம்

திருத்தணி, மார்ச் 25: திருத்தணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.  ÷திருத்தணி தொகுதியின் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை நி

திருத்தணி, மார்ச் 25: திருத்தணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 ÷திருத்தணி தொகுதியின் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை நிலைய செயலரான பொன்னேரி பகுதியைச் சேர்ந்த டி.எல். சதாசிவலிங்கத்தை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

 ÷இதையடுத்து திருத்தணி தொகுதியை இளைஞர் காங்கிரஸ் கட்சிக்குதான் ஒதுக்க வேண்டும் எனவும், வெளியூர் பிரமுகரை (பொன்னேரி) திருத்தணி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலினை செய்து வேட்பாளரை மாற்ற வேண்டும் என திருத்தணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் டி. தியாகராஜன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தும், உண்ணாவிரதமும் மேற்கொண்னர்.

 ÷இதனிடையே சதாசிவலிங்கம் திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள கூட்டணிக் கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவை திரட்டினார்.

 ÷வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் திருத்தணி தொகுதியின் புதிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ.வான இ.எஸ்.எஸ். ராமனை காங்கிரஸ் கட்சித் தலைமை திடீரென மாற்றி அறிவித்தது.

 பின்னனி என்ன?:

 ÷திருத்தணி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இ.எஸ்.எஸ்.ராமன் கடந்த 1996 - 2001 மற்றும் 2006 - 2011 வரை இருமுறை பள்ளிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இவர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

 ÷இ.எஸ்.எஸ்.ராமன் செங்குந்தர் முதலியார் இனத்தை சேர்ந்தவர். திருத்தணி தொகுதியில் செங்குந்தர் முதலியார், வன்னியர்கள் சம அளவில் உள்ளனர்.

 அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வன்னியர் ஆவார்.

 ÷ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் டி.எல்.சதாசிவலிங்கம் அகமுடைய முதலியார் இனத்தை சார்ந்தவர் என்பதால் எதிர்கட்சி கூட்டணி வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என எண்ணிய காங்கிரஸ் பதிலடி கொடுக்க செங்குந்தர் இனத்தைச் சேர்ந்த ராமனை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

 ÷திருவள்ளூர் மாவட்டத்தில் வாசன் அணியும், சிதம்பரம் அணியும் சமபலத்தில் உள்ளது.

 திருத்தணி தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் டி.எல். சதாசிவலிங்கம் கே.வி. தங்கபாலுவின் அணியைச் சேர்ந்தவர்

 ÷இ.எஸ்.எஸ்.ராமன் ஏற்கெனவே தமிழ்மாநில காங்கிரஸில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மூப்பனார் ஆதரவாளராக மாறியவர். தற்போது ஜி.கே.வாசன் ஆதரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com