போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதுச்சேரியில் விலைவாசி கடும் உயர்வு: வாட் வரி உயர்வால் உணவகங்களில் விற்பனை 30 % வீழ்ச்சி

புதுச்சேரி, ஏப். 9: புதுச்சேரி மாநிலத்தில் விலைவாசி உயர்வு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை உணவுகளின் மீதும் 10 சதவீதம் வா

Updated On :19 செப்டம்பர் 2012, 10:33 pm

புதுச்சேரி, ஏப். 9: புதுச்சேரி மாநிலத்தில் விலைவாசி உயர்வு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை உணவுகளின் மீதும் 10 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுவதால், நடுத்தர வர்கத்தினர் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால், கடந்த 3 மாதங்களில் ஹோட்டல்களின் வர்த்தகம் 30 சதவீதம் வீழ்ச்சியடைந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அளவில் ஒப்பிடுகையில், ஒவ்வொரு மாதமும் புதுச்சேரி மாநிலத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள நுகர்பொருள் மீதான குறியீட்டுப் புள்ளிகளை ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதம் 5 புள்ளிகள் அதிகரித்து 200 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ஹாமதாபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் இது 4 புள்ளிகள் அதிகரித்திருக்கிறது.

 இதற்கு காரணம், அனைத்து பொருள்களின் மீதான வாட் வரியை புதுச்சேரி அரசு கடந்த ஜனவரி மாதம் உயர்த்தியதே. சந்தையில் ஒன்றையொன்று சார்ந்த பொருள்கள் அனைத்தின் விலையும் அதிகரித்திருப்பதால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

 அதேபோல, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருள்கள் மீதும் 10 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் வரை 2 சதவீதமாக இருந்தது.

 இதனால், உணவகங்களுக்குச் சென்று ரூ.100-க்கு சாப்பிடும் பொதுமக்கள் கூடுதலாக ரூ.10 செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, பேக்கரி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கும் 10 சதவீதம் வாட் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவகங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

புதுச்சேரியில் தங்கி தினசரி ஹோட்டல்களில் சாப்பிடும் தொழிலாளர்களின் நிலையும் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உணவு விலை உயர்வால், சம்பளத்தின் பெரும்பகுதியை உணவுக்காகச் செலவிடும் சூழல் இருக்கிறது. உணவு வகைகளோடு, மது வகைகள், இறைச்சிகள், இயந்திரங்கள் எனப் பல்வேறு பொருள்களின் விலையும் உயர்ந்திருப்பதால், அனைத்து பொருள்களின் மீதான விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

மேலும், அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதோடு, சுற்றுலாப் பயணிகள் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் ஹோட்டல்களுக்கு வரும் பொதுமக்கள் வருகை கடந்த 3 மாதங்களில் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஹோட்டல்களுக்கு வரும் பொதுமக்களும் தங்களது நுகர்வு அளவு குறைந்திருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலர் கே.சுதாகர், சனிக்கிழமை கூறியது:

வாட் வரி விதிப்பால் ஹோட்டல்களுக்கு வருவோர் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சாப்பிட்ட பொருளுக்கு ரூ.100 கொடுக்கும்போது, சாப்பிடாமல் எதற்கு ரூ.10 கூடுதலாக தர வேண்டும் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏப்ரல் மாதம் தொடங்கியும் இதுவரை சுற்றுலா வருவோர் எண்ணிக்கை உயரவில்லை. சிலர் ஹோட்டல்களை மூடிவிட்டு, வேறு தொழில் செய்ய முடிவெடுக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

 வாட் வரி விதிப்பால் வர்த்தகம் 30 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. முன்பு தினசரி ரூ.15 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தபோது, அரசுக்கு ரூ.300 வரி கிடைத்தது. தற்போது ரூ.10 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தாலே அரசுக்கு ரூ.1000 வரி கிடைக்கும். இந்த கணக்கைக் காட்டி, வர்த்தகம் சிறப்பாக நடப்பதாகவும், வரி வசூல் அதிகமாக இருப்பதாகவும் கூறுவதில் அர்த்தம் கிடையாது. தினசரி வர்த்தகம் குறைந்தால், எப்படி தொடர்ந்து உணவகங்களை நடத்த முடியும்.

நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது வாட் வரியைக் குறைப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். பட்ஜெட் கூட்டம் எப்போது எனத் தெரியாது. ஆனால், ஜனவரி முதல் தற்போது வரை உள்ள வரியைச் செலுத்தக் கூறுகின்றனர் என்றார்.

அரசுக்கு வருவாயை உயர்த்த, வரிகளை அதிகப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கும்போது, அன்றாடம் மக்கள் உண்ணும் உணவின் மீது கை வைத்தது ஏன்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.