ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் : குடும்ப ஓய்வூதியதாரர்கள் தவிப்பு

செங்கல்பட்டு, மார்ச் 13: குடும்ப ஓய்வூதிய அட்டையைப் புதுப்பிப்பது குறித்து முறையாக அறிவிப்பு செய்யப்படாததால் செங்கல்பட்டு கருவூலம் மூலம் பலவகையான குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பிப்ரவரி மாத ஓய்வூதியத்தைப
Updated on
2 min read

செங்கல்பட்டு, மார்ச் 13: குடும்ப ஓய்வூதிய அட்டையைப் புதுப்பிப்பது குறித்து முறையாக அறிவிப்பு செய்யப்படாததால் செங்கல்பட்டு கருவூலம் மூலம் பலவகையான குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பிப்ரவரி மாத ஓய்வூதியத்தைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள், ஓய்வூதிய அனுமதியை புதுப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வூதிய குடும்ப அட்டையை புதுப்பிக்க கருவூல அலுவலகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் சம்பந்தப்பட்ட கருவூலங்களில் தேவையான கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்காததால் ஓய்வூதியதாரர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது. விபரம் தெரியாத ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

 மேலும் தங்களது ஓய்வூதியம் பெறுவதைத் தொடரும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு கருவூலங்களுக்குச் சென்று தேவையான விவரங்களை தெரிவித்தாலும் அவர்களுக்கு நடப்பு மாத ஓய்வூதியம் வழங்குவதில் தாமதமாகும் எனக் கருவூல அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

  இதனால் மாத செலவிற்காக குடும்ப ஓய்வூதியத்தை நம்பியுள்ள ஓய்வூதியதார்கள் செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு சேவை தேவையில்லை அரசு முன்பு அறிவிப்பு விடுத்திருந்தது. பின்னர் ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், ஓய்வூதியத்தை வங்கி ஏ.டி.எம். கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

  இதனால் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது குடும்ப உறுப்பினர் மூலமாக ஏ.டி.எம்-இல் ஓய்வூதியத்தை பெற்று வந்தனர். இதற்கிடையில், வாரிசு இல்லாத ஓய்வூதியதாரர்கள் இறந்த பின்னும் அவர்களது இறப்பு குறித்து கருவூலத்திற்குத் தெரிவிக்கப்படாததால் அவர்களது உறவினர்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து எடுத்து வந்தனர்.

 இதன் காரணமாக அரசு ஓய்வூதிய நிதி நிலையில் கோடிக்கணக்கில் இழப்பு அதிகரித்து வரும் சூழ்நிலை உருவாகியது.  இதனை அடுத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தாங்கள் நேரடியாக அரசு கருவூலத்திற்குச் சென்று, ஓய்வூதிய அட்டையைக் கருவூல அலுவலகத்தில் காண்பித்து பதிவு செய்து கையொப்பமிட வேண்டும் எனக் கருவூல அலுவலகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

  இது குறித்துத் தெரியாதவர்கள் வங்கிகளுக்கு சென்று வாக்குவாதம் செய்கின்றனர். இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், கருவூலக அலுவலகத்தில் இருந்து வங்கிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு தந்திருந்தால், அதை ஓய்வூதியதாரர்களுக்கு கூறி அனுப்பியிருப்போம். அவர்களும் கருவூலகத்தில் குடும்ப ஓய்வூதிய அட்டையை புதுபிக்க வசதியாக இருந்திருக்கும். இதனால் முதியவர்கள் வங்கிகளுக்கும், கருவூலத்திற்கும் அலைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்கின்றனர்.

  ஓய்வூதியம் பெறுபவர்கள் கூறுகையில், இந்த வருமானத்தை வைத்துத் தான் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. மேலும், பிறர் உதவியை நாடும் வயதான எங்களால் வங்கிக்கும் கருவூலகத்திற்கும் அலைய முடியவில்லை. வங்கியில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியிருந்தால்  நாங்கள் அலைக்கழிக்கப்படாமல் இருந்திருப்போம்.

 இது குறித்துத் தகவல் அறியாதவர்கள் வங்கிக்கு வந்து விட்டு, பென்ஷன் வரவில்லை. எனவே 2, 3 நாட்கள் பொறுத்து மீண்டுóம் வந்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என வீட்டிற்குச் சென்று விடுகின்றனர்.

   கருவூலத்தின் மெத்தனப் போக்கால் வங்கிக்கும், கருவூலகத்திற்கும் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

 கருவூல அலுவலர்களைக் கேட்டபோது, ஓய்வூதியதாரர்கள் இறந்த பின்பும் அவர்களது உறவினர்கள் அதைத் தெரிவிக்காமல் ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்து வருவதால் அரசுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தற்போது கையொப்பமிட்டு செல்வர்களுக்குக் கூட உடனடியாக ஓய்வூதியம் வருவதற்கு  வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com