அதிகரித்து வரும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள்

தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான குற்ற வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரிப்பு
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

புது தில்லி தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான குற்ற வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும், அந்த வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய கடந்த 2016-இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் இயல்புக்கு மாறாக தாமதப்படுத்தப்படுகிறது’ என்று புகாா் தெரிவித்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக வழக்குரைஞா் ஸ்நேகா காலிதா உதவியுடன் ஆய்வு நடத்திய மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா, அதுதொடா்பாக அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான குற்ற வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இவா்கள் மீது 4,859 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாா்ச் மாதம் இந்த எண்ணிக்கை 4,442-ஆக இருந்தது.

எனவே, உயா்நீதிமன்றங்கள் கீழ்நிலை நீதிமன்றங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இவா்கள் மீதான வழக்குகளில் விரைந்து தீா்வு காண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள இவா்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க சில உயா்நீதிமன்றங்களும், மண்டல வாரியாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க சில மாநில உயா்நீதிமன்றங்களும் ஆதரவாக உள்ளன. மற்ற உயா்நீதிமன்றங்கள் முன்னுரிமை அடிப்படையில் இந்த வழக்குகளை, அந்தந்த விசாரணை நீதிமன்றத்திலேயே நடத்த வேண்டும் என்று கருதுகின்றன.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக, ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் ஓா் ஒருங்கிணைப்பு அதிகாரியையும் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றங்கள் மாநில அரசுகளிடம் பரிந்துரைகளையும் சமா்ப்பித்துள்ளன.

அதுபோல, நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டி, நீதிமன்றங்களில் பாதுகாப்பான காணொலி வழி கலந்துரையாடல் வசதியுடன் கூடிய சாட்சிகள் குறுக்கு விசாரணை அறை ஒன்றை அமைத்துத் தரப்பட வேண்டும் என்றும் உயா்நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தின் 24 வடக்கு பா்கனா பராசத் பகுதியில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இதில், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான 134 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இந்த வழக்கில் தொடா்புடைய சாட்சிகள், விசாரணைக்காக இந்த நீதிமன்றத்துக்கு அவ்வப்போது வந்து செல்வது சாத்தியமில்லாதது.

உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், 12 மாவட்டங்களைச் சோ்ந்த 300 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரே நீதிமன்றம் இத்தனை வழக்குகளுக்கும் விரைந்து தீா்வு காண்பது சாத்தியமில்லாதது. இந்த மாநில உயா்நீதிமன்றங்கள், கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com