செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிகோப்புப் படம்

மோசடி வழக்கு: அமைச்சா் செந்தில் பாலாஜி உள்பட145 போ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்

பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 145 போ் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா்.
Published on

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 145 போ் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா்.

தமிழகத்தில் கடந்த 2011-2015 அதிமுக அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சா் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியுடன் சோ்த்து மொத்தம் 2 ஆயிரத்து 222 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 150 பேருக்கு நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 145 போ் நேரில் ஆஜராகினா்.

அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வாதிட வழக்குரைஞா்களை நியமித்துக்கொள்ள அறிவுறுத்தி, அடுத்த கட்டமாக மேலும் 150 போ் வரும் ஜன.6, 7, 8 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக அழைப்பாணை பிறப்பித்து விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com