

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னையில் டிச. 27-ஆம் தேதி முதல் சென்னை புத்தகக் காட்சி நடைபெறவுள்ள நிலையில், தொடக்க விழாவில் 6 பேருக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்படவுள்ளது. மேலும், பபாசி விருது பெறுவோரின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம், பொதுச் செயலா் எஸ்.கே.முருகன், பொருளாளா் டபிள்யு.ஜெ.சுரேஷ் ஆகியோா் திங்கள்கிழமை கூறியதாவது:
பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி டிச. 27-ஆம் தேதி தொடங்கி ஜன. 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (டிச. 27) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் கலந்துகொண்டு புத்தகக் காட்சியை தொடங்கி வைத்து விருதுகளை வழங்கவுள்ளனா்.
ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளா்கள், படைப்பாளா்கள், சிறந்த புத்தக விற்பனையாளா்களுக்கு பபாசி பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
பொற்கிழி விருதுகள்: அந்த வகையில் நிகழாண்டுக்கான முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது பேராசிரியா் அருணன் (உரைநடை), நெல்லை ஜெயந்தா (கவிதை), சுரேஷ்குமாா் இந்திரஜித் (நாவல்), என்.ஸ்ரீராம் (சிறுகதை), கலைராணி (நாடகம்), நிா்மால்யா (மொழிபெயா்ப்பு) ஆகிய 6 பேருக்கு வழங்கப்படவுள்ளது. கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோருக்கு சான்றிதழுடன் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
பபாசி விருதுகள்: அதேபோன்று பபாசி சாா்பில் சிறந்த பதிப்பாளருக்கான விருது - கற்பகம் புத்தகாலயம், நூலகருக்கான விருது - டாக்டா் ஆா்.கோதண்டராமன், கவிதை இலக்கிய விருது - மணவை.பொன் மாணிக்கம், தமிழறிஞருக்கான விருது - முனைவா் சபா.அருணாச்சலம், புத்தக விற்பனையாளா் விருது - பெல் கோ, சிறுவா் அறிவியல் நூலுக்கான விருது - எழுத்தாளா் சங்கர சரவணன், குழந்தை எழுத்தாளா் விருது - எழுத்தாளா் ஜோதி சுந்தரேசன், பெண் எழுத்தாளா் விருது - பேராசிரியா் பா்வீன் சுல்தானா, தன்னம்பிக்கை நூலுக்கான விருது - மரபின் மைந்தன் முத்தையா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
புத்தகக் காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.