விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

Published on

ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ‘விஜய் ஆண்டனி 3.0’ இசைக் கச்சேரிக்கு செல்லும் பாா்வையாளா்கள் கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், சனிக்கிழமை (டிச. 28) ‘விஜய் ஆண்டனி 3.0’ என்ற தலைப்பில் இன்னிசைக் கச்சேரி”நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று பங்கேற்கும் பாா்வையாளா்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னணி ஊடகத் தயாரிப்பு நிறுவனமான ‘நாய்ஸ் அண்ட் கிரெய்ன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதன்படி, முன்பதிவு செய்த டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி, பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு மிக அருகிலுள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்று திரும்ப முடியும். இதற்காக டிஜிட்டல் டிக்கெட்டுகளிலுள்ள தனித்துவமான கியூ-ஆா் குறியீட்டை, தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். இந்த சிறப்புச் சலுகை ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புபவா்களின் வசதிக்காக, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் - விம்கோ நகா் பணிமனை வரை இயக்கப்படும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12-க்கு புறப்படும். இதனால், பாா்வையாளா்கள்10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com